கனவு, அரவு, நிலவு, இரவு, இறவு, புதவு – முதலிய சொற்கள் முறையே
கனா, அரா, நிலா, இரா, இறா, புதா – முதலிய ஆகார ஈற்றுச் சொற்களே.
இவை செய்யுட்கண் ஆகாரம் குறுகி உகரம் பெற்றுக் கனவு, அரவு –
முதலியவாக வரும். புணர்வு, சார்வு, சேர்வு, சோர்வு, அளவு, தளர்வு –
முதலிய வுகரஈற்றுச் சொற்கள் தொடக்கத்தில் புணர்பு, சார்பு, சேர்பு,
சோர்பு, அளபு, தளர்பு முதலாகப் புகரஈற்றுச் சொற்களே என்பது
உய்த்துணரப்படும், இவ்வாறு பகரத்தை வகரமாக ஒலிக்கும் இயல்பினானே, வட
சொற் களிலும் ஆரியசொற்களிலும் உள்ள பகரம் வகரமாக ஒலிப்ப தாயிற்று,
கோபம் – கோவம், ஆபத்து – ஆவத்து, தபம் – தவம், ஆதபன்-ஆதவன், பாதபம்-
பாதவம் என வருதல் காணப் படும்.
உகரம் வகரத்தொடு வரும் என்பார் கதவு,கனவு முதலிய உகரவிகுதி
பெற்றவற்றையும் இயல்பான சொற்களாகவே கொண்டனர். (எ. ஆ. பக். 70)