உகரஈற்று வேற்றுமைப் புணர்ச்சி

உகரஈற்றுப்பெயர் வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் வன்கணம் வரின்
வல்லெழுத்து மிக்கும், ஏனைக்கணம் வரின் இயல்பாகவும் புணரும் .
எ-டு : கடுக்காய், கடுநன்மை, கடுவலிமை, கடுவருமை
(தொ. எ. 259 நச்).
எரு, செரு என்ற சொற்கள் அம்முச்சாரியை பெறும். செரு என்ற சொல்லின்
சாரியை அம்மின் மகரம் கெட, அகரம் மாத்திரம் செரு என்பதனொடும் புணர,
வன்கணம் வரின் வல்லெழுத்து மிக்கும், ஏனைய கணம் வரின் இயல்பாகவும்
புணரும்.
எ-டு : எருவங்குழி, எருவஞ்சேறு, எருவந்தாது,
எருவம்பூழி;
எருவ ஞாற்சி, எருவ வன்மை; எருவ வருமை;
செருவக்களம், செருவச்சேனை, செருவத்தானை செருவப்பறை; செருவ
நன்மை, செருவ வன்மை, செருவ வெழுச்சி. (தொ.எ. 260 நச்.)
சிறுபான்மை எருக்குழி, செருக்களம். எனச் சாரியை பெறாது வல்லெழுத்து
மிக்கு முடிதலும், எருங்குழி – என மெல் லெழுத்து மிகுதலும் கொள்க.
சிறுபான்மை, உருபுபுணர்ச்சிக்குப் பயன்படும் இன்சாரியை வேற்றுமைப்
பொருட்புணர்ச்சிக்குப் பயன்படுதலுமுண்டு.
எ-டு : எருவினை, எருவின் குழி; செருவினை, செருவின் கடுமை (தொ.எ.
260 நச். உரை)
ஒடுமரப்பெயர், உதிமரப்பெயர் போல, வன்கணம் வரின் மெல்லெழுத்து
மிக்குப் புணரும்.
எ-டு : ஒடுங்கோடு, ஒடுஞ்செதிள், ஒடுந்தோல், ஒடும்பூ
(தொ.எ. 262 நச். உரை)
சிறுபான்மை ஒருவங்காடு என்றாற்போல அம்முப் பெறுதலுமுண்டு. (நச்.
உரை)
எழுவின்புறம், கொழுவின் கூர்மை – என இவையும் இன்சாரியை
பெற்றன.
உது + காண் = உதுக்காண்-என வல்லெழுத்து மிக்கே வருதலும் கொள்க.
(263 நச். உரை)