நெடுமுதல் குறுகும் மொழிகள் யான் யாம் நாம் நீ தான் தாம் என்பன.
நீஇர் என்பதும் அத்தகையதே. இவைமுறையே என் எம் நம் நின் தன் தம்
நும்-என்று நெடுமுதல் குறுகிநிற்கும். இவை நான்கனுருபாகிய கு
என்பதனொடும், ஆறனுருபுக ளாகிய அது அ என்பவற்றொடும் புணரும்வழி, அகரச்
சாரியை பெற்று, என எம நம நின தன தம நும – என்றாகி, என + கு = எனக்கு,
என + அது = எனது, என + அ = எனவ என்றாற் போலப் புணரும். அது உருபின்
அகரம் கெட்டு விடும். எனவ என்புழி வகரம்உடம்படுமெய். (தொ. எ. 161
நச்.)
தனாது – எனாது – என்பனவும் தன + அது, என + அது – என்றே பிரித்துக்
கொள்ளப்படவேண்டுவனவாம். நிலைமொழி யீனும் வருமொழி முதலும் ஆகிய இரண்டு
அகரங்கள் ‘ஆ’ என ஒரு நெடில் ஆயின. ‘ஆது’ உருபு அன்று. ‘ஆது’ நெடு
முதல் குறுகும் மொழிகளிலேயே காணப்படுவதும் நோக்கத் தக்கது. (எ. ஆ.
பக். 96)