ஈரெழுத்துமொழிக் குற்றியலுகரப் புணர்ச்சி

கு சு து பு – என்ற நான்கனையும் ஈற்றெழுத்தாகவும், நெட்டெழுத்து
ஒன்றை முதலெழுத்தாகவும் கொண்ட ஈரெழுத்துமொழிக் குற்றியலுகர ஈற்றுச்
சொற்கள், வேற்றுமை அல்வழி என்ற இருவழியும் இயல்பாகப் புணரும்,
எ-டு : நாகுகால், நாகுஞாற்சி, நாகுவால், நாகசைவு – வேற்றுமை;
நாகு கடிது, நாகு நன்று, நாகு வலிது, நாகரிது – அல்வழி (தொ. எ. 412,
425 நச்.)
ஆறு என்ற எண்ணுப்பெயர், நிறை அளவுப் பெயர்களாகிய வன்கணம் வரின்,
அல்வழிக்கண் முதல் குறுகி இயல்பாகப் புணரும் (440); உயிர் முதல் மொழி
வரின், நெடில் குறுகாது இயல்பாகப் புணரும். வ-று : அறுகலம், அறு
கழஞ்சு; ஆறகல், ஆறுழக்கு. (தொ.எ. 449, 458 நச்.)
அவ்வெண்ணுப்பெயர் ஆயிரம் வருமொழியாயின் இயல்பா யும் நெடில்
குறுகியும் புணரும். வருமாறு : ஆறாயிரம், அறாயிரம் (தொ.எ. 469
நச்.)
யாது என்னும் வினாப்பெயர் அன்சாரியை பெற்று வேற் றுமைப்
பொருட்புணர்ச்சிக்கண் புணரும்.
எ-டு : யாதன் கோடு (தொ.எ. 422 நச்.)
ஈரெழுத்தொருமொழியாம் குற்றுகர ஈற்றுப்பெயர் சிறு பான்மை
அம்முச்சாரியை பெற்று, வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் புணரும்.
எ-டு : ஏறங்கோள் (சீவக. 489) (தொ.எ. 417 நச்.)
சிறுபான்மை உருபுபுணர்ச்சிக்கண் யாட்டினை என இன்சாரியை
பெறுவதுபோலப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் யாட்டின் கால் என்றாற் போல
இன்சாரியை பெறுதலுமுண்டு. (தொ.எ. 412 நச்.)
டு று – என்பனவற்றை ஈற்றிலுடைய ஈரெழுத்துமொழிக் குற்றியலுகர
ஈற்றுச் சொற்கள் உருபுபுணர்ச்சிக்கண்ணும் வேற்றுமைப்
பொருட்புணர்ச்சிக்கண்ணும் இனஒற்று இடையே மிக, வருமொழிக்கண் வந்த
வல்லெழுத்து இடையே மிகும். பொருட்புணர்ச்சிக்கண் இயல்புகணம் வரினும்
இனஒற்று இடையே மிகும்.
எ-டு : யாட்டை, யாட்டொடு; பாற்றை, பாற்றொடு; (தொ. எ. 196 நச்.)
யாட்டுக்கால், யாட்டுநிணம், யாட்டுவால், யாட்டதள்; ஏற்றுக்கால்,
ஏற்றுநிணம், ஏற்றுவால், ஏற்றதள் (தொ.எ. 411)
உருபுபுணர்ச்சிக்கண் யாட்டினை, பாற்றினை – என்றாற்போல இன்சாரியை
பெறுதலும் கொள்க. (தொ.எ. 197)