‘ஈரியல் மருங்கினும் இசைமை தோன்றும்’ பொருள்

பிறரெல்லாம் ‘ஈறியல் மருங்கினும்’ என்று பாடம் ஓதினர்.
முப்பாற் புள்ளியாகிய ஆய்த எழுத்தினது இசைமை (எழுத் தாக இசைக்கும்
தன்மை) உயிரினது மருங்காகவும் ஒற்றினது மருங்காகவும் தோன்றி
வரும்.
ஈர் இயல் – உயிரியல்பும் ஒற்றியல்பும். உயிரியல்பாவது, இசைத்துச்
செய்யுளின்கண் அலகு பெற்று வருதல்; ஒற்றியல் பாவது, அலகு பெறாது
அசைக்கு உறுப்பாகி வருதல்.
எ-டு: ‘அற்றா லளவறிந் துண்க அஃதுடம்பு’
(குறள் 943)
‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்’
(குறள். 236)
முறையே இவ்வீரிடத்தும் ஆய்தம் உயிரியல் மருங்காய் அலகு பெற்றும்,
ஒற்றியல் மருங்காய் அலகு பெறாது அசைக்கு உறுப்பாயும் நின்றவாறு. (தொ.
எ. 39 ச.பால.)