ஈங்கோய்மலை

திருவிங்க நாத மலை’ என இன்று அழைக்கப் பெறும் இவ்வூர் இன்று திருச்சி மாவட்டத்தைச் சார்ந்ததாக அமைகிறது. குன்றின் மேல் சிவன் கோயில் உள்ள தலம். எனவே மலை என்பது இங்கு குன்று குறித்தமைகிறது. ஈங்கை என்ப தற்கு விளக்கம் தரும் நிலையில் தமிழ் லெக்ஸிகன் இண்டஞ் செடி ( ஈங்கைப் பைம்புதல் அணியும் – ஐங் 456 ) எனக் கூறுகிறது ( vol I part I பக். 374). எனவே இண்ட செடிகள் மிகுந்த மலை என்ற பொருளிலேயே இப்பெயர் அமைந்திருக்கக் கூடும். அகத்தியர் ஈவடிவில் சென்று சுவாமியைத் தரிசித்த தலம் என்பது புராணக் கதை ! பின்னர் திரு ஈங்கோய் நாதன் மலை என்று கோயில் செல்வாக்கு காரணமாக அடைந்த பெயர் இன்று திருவிங்க நாதமலை எனத் திரிந்திருக்கலாம் எனத் தோன்றுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் இது ( 70 ).
பறையும் குழலும் கழலுமார்ப்பப்படு காட்டெரியாடும்
இறைவர் சிறைவண்டறை பூஞ்சாரலீங்கை மலையாரே -4
திருநாவுக்கரசரும் இம்மலையின் சிறப்பை ஏலமண நாறு ஈங்கோய் என்று ( 231-3 ) நவில்கின்றார். மேலும் மாணிக்கவாசகர் ஈங்கோய் மலையெம் எந்தாய் போற்றி ( போற்றித் 158) என வழிபடுகின்றனர். பட்டினத்துப் பிள்ளையார் தம் திருவேகம்ப முடையார் திருவந்தாதியில் வையார் மழுப்படை ஏகம்பர் ஈங்கோய் மலைப்புனம் ( 16 ) என இதனைச் சுட்டுகின்றார். சேக்கிழாரும் இதனைக் காட்டுகின்றார் ( 34-322-4 ). எனவே பலரின் மனத்தையும் கவர்ந்ததொரு தலமாக இது விளங்கியது என்பது தெளிவாகின்றது.