இஃது உயிரெழுத்து வரிசையுள் மூன்றாவது; அங்காப்போடு அண்பல் முதலினை
நாவிளிம்பு உறப் பிறப்பது; ஒருமாத்திரை அளவினதாம் குற்றெழுத்து.
இஃது அண்மைச் சுட்டுப் பொருளில் வரும் இடைச்சொல் – இவன்,
இக்கொற்றன்.
இஃது ஒரு சாரியை – மண் + யாது = மண்ணியாது; வேள் + யாவன் =
வேளியாவன். (நன்- 206 சங்)
ய ர ல முதலவாகும் ஆரியச் சொற்களை இயக்கன், இராமன், இலாபம் என
வடசொல் ஆக்க இது முன் வருவது.
ஆரியச் சொற்களை வடசொல்லாக்க, வாக்யம் – வாக்கியம் க்ரமம் – கிரமம்,
சுக்லம் – சுக்கிலம் என, வல்லொற்றுக்களை அடுத்த ய ர ல இவற்றுக்கு
இடையே இது வருவது. (நன். 148, 149 சங்.)
இது விரவுப்பெயர் விகுதி – செவியிலி; ஆண்பாற்பெயர் விகுதி –
வில்லி; பெண்பாற்பெயர் விகுதி – கூனி; அஃறிணைப் பெயர் விகுதி – கனலி;
வினைமுதற்பெயர் விகுதி – அலரி; செயப்படுபொருள் விகுதி – ஊருணி;
கருவிப்பொருள் விகுதி – மண்வெட்டி; ஏவல் ஒருமை விகுதி – செல்லுதி;
வியங்கோள் விகுதி – காண்டி (காண்க); வினையெச்ச விகுதி – ஓடி; தொழிற்
பெயர் விகுதி – வெகுளி; பகுதிப்பொருள் விகுதி – உருளி. (இலக்கணச்
சுருக்கம் முதலியன)