இல் என்னும் இன்மைச் சொல் புணர்ச்சி

இன்மைப் பொருளை உணர்த்தும் இல் என்பதனை நிலை மொழியாகக் கொண்டு,
வருமொழி வல்லெழுத்து முதல் மொழியாகப் புணரின், ஐகாரமும் வல்லெழுத்தும்
பெறுதல்- ஐகாரம் பெற்று இயல்பாகவே புணர்தல்- ஆகாரமும் வல்லெழுத்தும்
பெறுதல் – சாரியை எதுவும் பெறாது இயல் பாகவே முடிதல் – என்ற நான்கு
நிலைகள் உளவாம்.
வருமாறு : இல் + பொருள் – இல்லைப் பொருள், இல்லை பொருள்,
இல்லாப் பொருள், இல் பொருள் – என முறையே காண்க. (தொ.எ.372நச்.)
‘இல்’ என்னும் பண்படி நின்று வருமொழியுடன் புணர்வழி, ஐகாரமும்
ஆகாரமும் இடையே சாரியையாக வருதலின், இல்லைப் பொருள் – இல்லை பொருள் –
இல்லாப் பொருள் – என்பன ‘இல்பொருள்’ என்னும் இயல்பு புணர்ச்சி போல்
பண்புத்தொகையே ஆம். (நன். 233 சங்கர.)