இலேசு

‘சில்வகை எழுத்தின் செய்யுட்டாகும்’நுற்பாவிலே மிகை யாகக்
காணப்படும் சொல் இலேசு எனப்படும். இலக்கண உரையாசிரியன்மார் இம்மிகைச்
சொல்லை வாளா விடுக்காது, நூல் செய்த காலத்துக்குப் பிற்பட்டுத் தம்
காலத்தில் வழங்கும் செய்திகளில் நூலில் குறிப்பிடப்படாமல்
விடுபட்டவற்றை இம்மிகைச்சொல் பெறப்பட வைப்பதாகக் கூறுதல் மரபு.
எ-டு : ‘பல்லவை நுதலிய அகர
இறுபெயர்
வற்றொடு சிவணல் எச்ச மின்றே’
(தொ.
எ. 174 நச்.)
இந்நூற்பாவில் ‘எச்சமின்றே’ என்ற சொற்றொடர் மிகை. இஃது இன்றி
‘வற்றொடு சிவணும்’ என்று கூறினும் நுற்பா வின் பொருள் முற்றும்.
இம்மிகைச்சொல்லைக் கொண்டு, “173ஆம் நுற்பாவில் இன்சாரியை பெற்றன
பிறசாரியை பெறுதல் கொள்க. நிலாத்தை, துலாத்தை, மகத்தை என வரும்.
இன்னும் இதனானே, பல்லவை நுதலியவற்றின்கண் மூன்றாம் உருபு வற்றுப்
பெற்றே முடிதல் கொள்க” என்று நச்சினார்க் கினியர், நுற்பாவில்
கூறப்படாத செய்திகளைக் குறிப்பிட் டுள்ளார்.
இது போன்ற பல செய்திகளும் இலேசு என்ற மிகைச் சொல்லால்
உரையாசிரியன்மாரால் கொள்ளப்படுகின்றன.
‘சீர்நிலை தானே ஐந்தெழுத்து இறவாது’
(தொ.பொ.353 பேரா.)
அசை சீராயவழி அவை மூன்றெழுத்தின் இறவா என்பது ‘தான்’ என்பதனை
இலேசுப்படுத்திக் கொள்வதால் கொள்ளப் படும் – என்று பேராசிரியர்
குறிப்பிட்டுள்ளார்.