இலாவாணம் என்றும் இது வழங்கும். இலாவாணகம் உதயணனுக்குரிய பெரிய நகர்களுள் ஒன்று. பகைவர் வருதற்கு மிக அஞ்சும் பேரரண்கள் முதலியவற்றையும் இடையே ஓர் அரண்மனையையும் உடையது. இதன் அருகில் வளமுள்ள ஒரு மலையுண்டு. உண்டாட்டுக்குரிய பலவகை மரங்கள் கொடிகளையுடைய பூஞ் சோலைகளும், சுனை முதலிய நீர்நிலை களும் படமாடம் முதலியன அமைத்தற்குரிய இடங்களும் இதன் சாரலில் இருந்தன. விரிசிகையின் வேண்டு கோட்படி பலவகை மலர்களைக் கண்ணி முதலியனவாகக் கட்டி உதயணன் சூடியது இச்சோலைகளுள் ஒன்றிலே தான் உதயணனால் உருமண்ணுவாவிற்குக் கொடுக்கப்பெற்ற சீவிதங்களுள் இந்நகரமும் ஒன்று.
“இருங்கடல் வரைப்பினிசையொடு விளங்கிய
சுயந்தியம் பதியும் பயம்படு சாரல் ;
இலாவாண கமும்நிலாவ நிறீஇ” (பெருங் 9:20.22)
உஞ்சேனை.
உஞ்சேனை என்பது உச்சயினி நகரமே. இது அவந்தி என்றும் உஞ்சை எனவும் வழங்கும். அவந்தி நாட்டிலுள்ளது. பிரச் சோதனனின் தலைநகர்,
“அமரர் தலைவனை வணங்குவதும் யாமெனச்
சிமையத் திமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத் தடவியும்” (சிலப் 6:27 29)
“கொடிக் கோசம்பிக் கோமகனாகிய
வடித்தேர்த்தானை வத்தவன்தன்னை
வஞ்சஞ் செய்துழி வான்தளை விடீஇய
உஞ்சையில் தோன்றிய யூகி அந்தணன்
உருவுக்கொவ்வாஉறு நோய் கண்டு” (மணிமே.15:61 65)
“நீங்கிய மன்னற்கு நிகழ்ந்தது கூறுவென்
சேராமன்னன் உஞ்சேனை யம்பெரும் பதிக்கு“ (பெருங். 1:48;38 40)
கபில்புரம்.
கோவலனின் முற்பிறப்பைப் பற்றிக் கூறும்பொழுது கபில புரம் என்ற ஊர் கூறப்பெற்றுள்ளது. குமரன் என்ற மன்னனால் ஆளப்பெற்றது. மணிமேகலையில் இவ்வூர் கபிலை எனக் கூறப்பெற்றுள்ளது. கலிங்க நாட்டினது இவ்வூர்.
“கடிபொழி லுடுத்த கலிங்க நன்னாட்டு
வடிவேற்றடக்கை வசுவுங் குமரனும்
தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும்
காம்பெழுகானக் கபிலபுரத்தினும்
அரசாள் செல்வத்து நிரைதார் வேந்தர்” (சிலப் 2:23:138 142)
“காசில் பூம்பொழில் கலிங்க நன்னாட்டுத்
தாயமன்னர் வசுவுங் குமரனும்
சிங்கபுரமும் செழுநீர்க் கபிலையும்
அங்காள்கின்றோ ரடற்செருவுறு நாள்” (மணிமே 26;15 18)