க ட த ற – என்னும் நான்கு மெய்களும் ‘இன்’னும் ஆகிய ஐந்தும்
ஐம்பால் மூவிடத்தும் இறந்தகாலம் காட்டும் தெரிநிலை வினைமுற்றுப்
பகுபதங்களில் இடைநிலைகளாம். இவற்றுள், ககரம் முதனிலை எழுத்தாயே வரும்;
தகரம் முதனிலை எழுத்தாகாமல் வரும்; ஏனைய டகரமும் றகரமும் முதனிலை
எழுத்தாயும் அதற்கு இனமாயும் வரும்.
எ-டு : நக்கான்; உரைத்தான்; விட்டான், உண்டான்; உற்றான்,
தின்றான்; உறங்கினான்.
உரையிற் கோடலால், நக்கிலன் – உரைத்திலன் – உண்டிலன் – நின்றிலன் –
உறங்கிலன் என எதிர்மறைக்கண் இவ்விடை நிலைகள் எதிர்மறையைக் காட்டும்
‘இல்’ இடைநிலையொடு வருமாறு காண்க.
எஞ்சியது, போயது. போய – என யகரமும், போயன – என அன்னும், போனான்,
போனது – என னகரமும் சிறுபான்மை இறந்த காலம் காட்டும். (இ. வி. எழுத்.
47)
எஞ்சியது தப்பியது நீங்கியான் – என இகரத்தை அடுத்த யகர ஒற்றும்
(எஞ்சு + இ + ய் + அ + து; தப்பு +இ + ய் + அ+து; நீங்கு +இ +ய் +
ஆன்), போயது போய – என யகர ஒற்றும் (போ+ய்+அ), போனான் போனது – என னகர
ஒற்றும் (போ +ன் + ஆன்;போ + ன் + அ + து)சிறுபான்மை இறந்த காலம்
காட்டும். (நன். 142 இராமா.)
[இன் என்ற இறந்தகால இடைநிலையது
விகாரமே இகரமும் னகரமும் என்பர் சிவஞா. (142)
]