இரும்பை மாகாளம்

இன்று தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த இவ்வூர் முன்னைய பெயரிலேயே இன்று வரை வழங்குகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம். மாகாளர் வழிபட்ட தலம் என இதனை இன்று சுட்டினும், சம்பந்தர் பாடல் மேலும் சில விளக்கங்களைத் தருகிறது. இவர் தம் 253 ஆம் பதிகத்தில் 11 பாடல்களில் இத்தலத்து இறைவனைப் பூசிக்கின்றார். எனினும் அனைத்துப் பாடலிலும் இரும்பைதனுள் காணப்படும் மாகாளமே என்றே விளித்துப்பாடுகின்றார். சான்றாக,
எண்டிசையும் புகழ் போய் விளங்கும் இரும்பைதனுள்
வண்டு கீதம் முரல் பொழில் சுலாய் நின்ற மாகாளமே -1
இட்டமாக இருக்கும் இடம் போலிரும்பை தனுள்
வட்டந் சூழ்ந்து பணிவார் பிணிதீர்க்கும் மாகாளமே – 8
குரவமாரும் பொழிற் குயில்கள் சேரும் இரும்பை தனுள்
மருவி வானோர் மறையோர் தொழுகின்ற மாகாளமே – 9
என்பதைக் காட்டலாம். இப்பாடலைப் பயிலும் இரும்பை ஊர்ப்பெயர் என்பதும். மாகாளம் (இறைவன் மாகாளேச்சுவரர் என்பது இறைப்பெயர் அல்லது இறைவன் வீற்றிருக்கும் இடம் குறித்த பெயராக அமைந்து இன்று இறைச் சிறப்பு காரணமாகச் செல்வாக்கு காரணமாக ) இரும்பை மாகாளம் என ஊர் வழங்கப்படத் தொடங்கியிருக்கலாம் எனச் சுட்டலாம். போது என்ற இரும்மை என்ற சொல்லை ஆராயும் போது இருப்பை என்பதன் திரிவுவடிவமாக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. இருப்பை என்பதற்கு இலுப்பை இன்னொரு பெயரும் உண்டு ; இலுப்பை – இலுப்பை மரத்தையும், நெல்வகையையும் குறிக்கும் நிலை ( தமிழ் லெக்ஸிகன் Vol I Part I பக். 331 ) இதுவும் தாவர அடிப்படையில் பெற்ற பெயராக இருக்கலாமோ எண்ணத்தைத் தருகிறது. எனினும் சம்பந்தர் பாடல், என்ற
இடமெழில் கொள் சோலை யிரும்பை ( 254 – 3 )
இரும்பை தனுள்
மஞ்சில் ஓங்கும் பொழில் சூழ்ந்த அழகாய மாகாளம் ( 254-4 )
குரவமாரும் பொழிற் குயில்கள் சேரும் இரும்பை ( 254-10 )
என்று. சோலைகள் சூழ்ந்த இரும்பையின் வளத்தைச் சுட்டு மாற்றான் இப்பகுதி இலுப்பை மரங்களால் நெருங்கியதாக இருந்திருக்க வாய்ப்பு அமைகிறது. மாகாளன் என்று நோக்க, சிவகணத்தலைவரில் ஒருவன் என தமிழ் லெக்ஸிகன் ( Vol v Part 1 – பக். 3143 ) குறிக்கின்றது. எனவே சிவன் தொடர்பாக மாகாளம் என்ற இச்சொல் இங்கு அமைந்து இருக்கலாம் எனத் தோன்றுகிறது.