இருதிசை புணர்தல்

வடக்கு தெற்கு குணக்கு குடக்கு (கிழக்கு, மேற்கு) என நான்கு
திசைகளில் ஒருதிசைப்பெயர் நிலைமொழியாகவும் மற்றொரு திசைப்பெயர்
வருமொழியாகவும் அமைந்து புணரும்வழி, இரு மொழிக்குமிடையே ஏ என்னும்
சாரியை வரும்.
வருமாறு : வடக்கே தெற்கு, குணக்கே குடக்கு, கிழக்கே மேற்கு,
வடக்கே கிழக்கு, தெற்கே குணக்கு, தெற்கே குடக்கு, வடக்கே குணக்கு –
என்றாற்போல வருதல் காண்க. (தொ. எ. 431 நச்).
பெருந்திசைகளாவன வடக்கும் தெற்கும்; இவற்றொடு கோணத் திசைகளாகிய
குணக்கு குடக்கு (கிழக்கு, மேற்கு) என்பன புணரும்வழி, வடகுணக்கு –
வடகிழக்கு – வடகுடக்கு – வடமேற்கு – தென்குணக்கு – தென்கிழக்கு –
தென்குடக்கு – தென்மேற்கு – என, நிலைமொழிகளாகிய வடக்கு ‘வட’ எனவும்
தெற்கு ‘தென்’ எனவும் திரிந்து வருமொழிகளொடு புணரும். (தொ.எ. 432
நச்.)
தொல்காப்பியனார் காலத்து வடக்கு ‘வடகு’ என்றே வழங்கப்பட்டிருத்தல்
வேண்டும். (கிழக்கு மேற்கு என்பன குணக்கு குடக்கு என்ற பெயர்களாலேயே
வழங்கப்பட்டன). (எ. ஆ. பக். 170).