இரா என்பது இரவுக்காலத்தைக் குறிக்கும் ஆகார ஈற்றுப் பெயரும், இராத
என்ற பொருள் தரும் எதிர்மறைப் பெயரெச்சமும் ஆம்.
இரவுக் காலத்தைக் குறிக்கும் இரா என்ற காலப்பெயர்
இருபெயர்உம்மைத்தொகையில் இராஅப்பகல் என எழுத்துப்பேறளபெடையாகும் அகரம்
பெறும். அங்ஙனமே எழுவாய்த்தொடரிலும் இராஅக் கொடிது என அகரம் பெறும்.
ஆயின் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் பெயர்கொண்டு முடியினும் வினை
கொண்டு முடியினும் அகரப்பேறின்றி முடியும்.
இராக்கொண்டான் – இராவிடத்துக் கொண்டான் என ஏழன் பொருளது;
இராக்காக்கை – இராவிடத்துக் காக்கை என ஏழன் பொருளது; இராக்கூத்து –
இராவிடத்துக் கூத்து என ஏழன் பொருளது; இராஅக் காக்கை – இல்லாத காக்கை
என்னும் பெயரெச்ச எதிர்மறை; இராஅக் கூத்து – இல்லாத கூத்து என்னும்
பெயரெச்ச எதிர்மறை.
எனவே, இரா என்பது பெயரெச்சமறை ஆகியவிடத்து அகர எழுத்துப்பேறளபெடை
பெறும். அஃது இரவுக் காலத்தைக் குறிக்கும் பெயராயவழி அல்வழிப்
புணர்ச்சியில் அகரம் பெறும்; வேற்றுமைப் புணர்ச்சியில் அது பெறாது.
(தொ. எ. 223, 227 நச். உரை) (எ. ஆ. பக். 137)