இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊர். இராமன் சிவனை வழிபட்டமை காரணமாக உண்டாக்கிய பெயர் இராமனதீச்சரம். இன்று இராமேச்சுரம் என்று வழங்கப்படுகிறது. இராமனது கதைபற்றிய சில செய்திகளைச் சங்க இலக்கியத்தில் காணினும் இவ்வூர் பற்றிய எண்ணம் அவண் இல்லை. எனினும் கம்பராமாயணத்திற்கு முன்னரேயே இவ்வூர், தன் கோயிற் சிறப்பால் பெருமை பெற்று விட்டது என்பதனை, இவ்வூர் பற்றிய இலக்கியக் குறிப்புகள் காட்டுகின்றன. நற்றொண்டருடன் நாளும் போற்றிச் செல்வாராகிய ஞானசம்பந்தர்,
விண்ணவரைச் செற்றுகந்தான், இலங்கை செற்ற மிக்க
பெரும் பாதகத்தை நீக்க வேண்டித்
திண்ணிய பொற் சிலைத் தடக்கை இராமன் செய்த
திருவிராமேச்சுரத்தைச் சென்று சேர்ந்தார்
கோயில் எனத் தெளிவாகச் சேக்கிழார் சுட்டும் தன்மையிலும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் போன்ற பல சிவனடியார் பாடல் பெற்ற தன்மையிலும் இதன் பழம்பெருமை விளக்கம் பெறுகிறது. மேலும் இதன் கடற்கரை சார்ந்த நிலையை அந்தண் கானல் இடுதிரை இராமேச்சுரம் என்ற அடி குறிப்பிடுகிறது. (திருநா – 285 – 8 )