இரத்தின தீவம் என்பது இலங்கையையே குறிப்பதாகத் தெரிகிறது. மணிபல்லவத்திற்கருகில் இரத்தின தீவம் இருப்பதாகவும், இரத்தின தீவத்தில் சமந்தம் என்ற மலை இருப்பதாகவும், சாது சக்கரன் என்பவன் இரத்தின தீவம் சென்று தருமசக்கரம் உருட்டி வந்துள்ளதாகவும் மணிமேகலை கூறுகிறது. சமந்தம் என்பது இலங்கையிலுள்ள “ஆடம்ஸ்பீக்” என்று ஆங்கிலத்தில் வழங்கும் மலையையே குறிக்கும் என்ற கருத்துப் பொருத்தமாகத் தோன்றுகிறது.
“சாது சக்கரன் மீவிசும்பு திரிவோன்
தெருமர லொழித்தாங் கிரத்தினத் தீவத்துத்
தருமசக்கரம் உருட்டினன் வருவோன்” (மணிமே (10: 24 29)
இலங்கைத் தீவின் மேன்மாகாணத்தில் தென்கீழ்ப் பிரிவில் இரத்தினபுரி என்ற ஓரிடமும், சிலராற் சமந்த கூடமென்றும் சிலராற் சமனெலைவென்றும் சொல்லப் பட்டுள்ள மலையொன்றும் உள்ளன என்று யாழ்ப் பாணம் வட்டுக்கோட்டை. வே. சதாசிவம் பிள்ளை யென்பவரால் கி.பி, 1884இல் பதிக்கப்பட்டுள்ள இலங்கை பூமி சாஸ்திர சங்கரகமென்னும் புத்தகத்தால் தெரிகின்றன. மணிபல்லவம் காவிரிபூம்பட்டினத்திற்குத் தெற்கே ஆறைந்து யோசனை தூரத்துள்ளதென்றும் அதன் அயலிலுள்ளது இரத்தின தீவம் என்றும் முன்பு கூறியதற்கு “ஆடம்ஸ்பிக்” காவிரிப்பூம்பட்டினத்திற்குத் தெற்கே சற்றேறக்குறைய முப்பது காத தூரத்தில் இருத்தலும், அம்மலை பண்டைகாலத்துச் சமந்த மென்றும் சமனொளியென்றும் கூறப்பட்டு வந்தது என்பதற்கு இக்காலத்து அது “சமந்தகூடம்” “சமனெலை” என்று கூறப்படுதலும், அம்மலை இரத்தின தீவத்துள்ள தென்பதற்கு அதனைச் சார்ந்த ஓரிடம் ‘இரத்தினபுரி’ என்று பெயர் பெற்றிருத்தலும், சமனொளியென்பது இலங்கா தீவத்து உள்ளதென்பதற்கு அஃது இலங்கைத் தீவில் இருத்தலும் சான்றாதல் அறிக. (மணிமேகலை ௨.வே.சா. அடிக்குறிப்பு பக், 98 பதிப்பு 1898).
“தீவதிலகை செவ்வன முரைக்கும்
ஈங்கித னயலகத்து இரத்தின தீவத்து
ஓங்குயர் சமந்தத்துச்சி மீமிசை” (௸.11:20 22)