மெய்யையும் உயிரையும் முதலும் ஈறுமாகவுடைய பகாப்பதம் பகுபதம்
என்னும் இரண்டு பதங்களும் தன்னொடு தானும் பிறிதொடு பிறிதுமாய்
அல்வழிப் பொருளிலோ வேற்றுமைப் பொருளிலோ பொருந்துமிடத்து, நிலைமொழியும்
வரு மொழியும் இயல்பாகவும் திரிபுற்றும் புணர்வது புணர்ச்சியாம்.
எ-டு : மணி + அழகு, நிலம் + வலிது, மணி + பெரிது, நிலம் +
அழகிது – நிலைமொழியீற்று உயிரும் மெய்யும் வரு மொழி முதல் மெய்யும்
உயிரும் முறையே தன்னொடு தானும் பிறிதொடு பிறிதும் இயல்பாகப்
புணர்ந்தன.
அவன் + வந்தான், பொன் + வண்டு, பொன்னன் + கை, கிளி + அழகிது –
பகுபதமும் பகாப்பதமும் தன்னொடு தானும் பிறிதொடு பிறிதும் இயல்பாகப்
புணர்ந்தன. (நன். 151)