இயல்பு புணர்ச்சி (1)

நிலைமொழி வருமொழியொடு புணரும்வழித் தோன்றல் திரிதல் கெடுதல் என்ற
மாற்றங்கள் நிலைமொழி ஈற்றிலோ வருமொழி முதலிலோ இருமொழிக்கும் இடையிலோ
நிகழா மல் இருமொழியும் இயல்பாகப் புணரும் புணர்ச்சி இயல்பு
புணர்ச்சியாம்.
1. நிலைமொழி மெய்யீற்றதாக, வருமொழிமுதலில் உயிர் வருவழி,
வருமொழி உயிர் நிலைமொழி யீற்றோடு புணர்வது. எ-டு : அவன் + அழகியன் =
அவனழகியன்.
2. நிலைமொழி குற்றியலுகர ஈற்றதாக, வருமொழி உயிர் முதலதாக
வருவழி, அவ்வுயிர் அக்குற்றிய லுகரத்தின் மேல் ஏறிமுடிவது. எ-டு :
நாகு + அரிது = நாகரிது.
3. நிலைமொழி உயிரீற்றதாக, வருமொழி உயிர்முத லாக, இடையே
உடம்படுமெய் பெற்றுப் புணர்வது. எ-டு : பலா + அழகிது =
பலாவழகிது.
இவையாவும் இயல்பு புணர்ச்சியாம்.
கல் + எறிந்தான் = கல்லெறிந்தான் என, தனிக்குறில்முன் ஒற்று
வருமொழி முதலில் உயிர்வரின் இரட்டி முடிவதும் இயல்பு புணர்ச்சி என்பர்
நச். (தொ. எ. 144 நச். உரை.)