இயல்புகணம் வருமொழியாக வரின் திரியுமிடம்

தொடர்மொழிகளின் முன் ஞ ந ம என்ற மென்கணம் முதலா கிய மொழிகள் வரின்
மெல்லெழுத்து மிக்கு முடிதலுமுண்டு.
எ-டு : கதிர்ஞெரி, கதிர்ஞ்ஞெரி; கதிர்நுனி, கதிர்ந்நுனி;
கதிர்முரி, கதிர்ம்முரி.
சிறுபான்மை ஓரெழுத்து மொழிகளும் ஈரெழுத்து மொழி களும் மெல்லெழுத்து
மிக்கு முடிதலுமுண்டு.
எ-டு : பூஞெரி, பூஞ்ஞெரி; பூநுனி, பூந்நுனி; பூமுரி,
பூம்முரி;
காய்ஞெரி, காய்ஞ்ஞெரி; காய்நுனி, காய்ந்நுனி; காய்முரி,
காய்ம்முரி.
சிறுபான்மை, கைஞ்ஞெரித்தார் – கைந்நீட்டினார் – கைம் மறித்தார் -என
ஓரெழுத்து மொழிகளும், மெய்ஞ்ஞானம் – மெய்ந்நூல் – மெய்ம் மறந்தார் –
என ஈரெழுத்து மொழிகளும், மெய்ம்மை – பொய்ம்மை முதலிய
பண்புப்பெயர்களும் மிக்கே முடியும் என்பாரும், இவற்றை நலிந்து கூறப்
பிறத்தலின் இயல்பு என்பாருமுளர். பூஞாற்றினார் – போல்வன மிகாதன. (தொ.
எ. 145 நச். உரை.)