இயல் என்றது ஒருசாதிப்பொருள் கொண்டது என்பதும், படலம் என்பது
பலசாதிப்பொருள் கொண்டது என்பதும் ஆயிற்று. இயல் என்பதற்கு உதாரணம்
இந்த நூலிலே எழுத்தியல் என்பதில் எழுத்திலக்கணமே வருதலும், பதவியல்
என்பதில் பதத்து இலக்கணமே வருதலும், புணரியல் என்பதில்
புணர்ச்சியிலக்கணமே வருதலும் ஆம்.
படலம் என்பதற்கு உதாரணம், படலவுறுப்பைக் கொண் டிருக்கிற
காவியங்களில், இயல்போல ஒருவழிப்படாமல், பாட்டுடைத் தலைவன் கதையைச்
சொல்வதும் அல்லாமல் மலை வருணனை- கடல் வருணனை – நாடு நகரம் முதலிய பல
வருணனைகளும் கலந்து வருதலும் காண்க. (நன். 17 இராமா.)