ஈரெழுத்தொரு மொழிகளுள் நெடிலை யடுத்து இடையே ஒற்றுமிக்க டுகர றுகர
ஈற்றுச் சொற்கள், ஏனைய குற்றியலுகர ஈறுகளுக்கு விதிக்கப்பெற்ற
இன்சாரியை பெறாது இயல்பாய் உருபுபுணர்ச்சிக்கண்ணும்
பொருட்புணர்ச்சிக்கண்ணும் முடிவு பெறும் இயல்பின.
இயற்கை – (ஈண்டுச்) சாரியை பெறாமை; செயற்கை – செய்தியை யுடைமை;
இயற்கைய ஆதல் – சாரியை பெறா திருத்தல். (தொ. எ. 198 இள. 197 நச்.)
எ-டு : யாடு + ஐ = யாட்டை; யாடு + கால் = யாட்டுக்கால்
யாறு + ஐ = யாற்றை; யாறு + கால் = யாற்றுக்கால்
இவற்றுக்கு இன்சாரியை விலக்கவே, வேறு சாரியை பெறுங் கொல் என்ற
ஐயத்தை அகற்ற, அவை சாரியை எதுவும் பெறாத இயல்பினையுடைய என்று
கூறப்பட்டது. (எ.ஆ.பக். 131).
இவற்றைத் தொல்காப்பிய உரையாசிரியர்கள் உயிர்த் தொடர்க்கும் கொண்டு,
முயிறு + ஐ = முயிற்றை – எனச் சாரியை பெறாது இடையொற்று மிக்குப்
புணர்தலைக் கொண்டனர்; பிற்காலத்தே, யாட்டினை – யாட்டின் கால்,
யாற்றினை – யாற்றின் கால், முயிற்றை – முயிற்றின்கால் எனச் சாரியை
பெறுதலும் பெறாமையும் நிகழ்கின்றவாற்றைக் குறிப்பிட்டனர்.
‘யாத்த என்ப யாட்டின் கண்ணே’ (தொ. பொ. 602 பேரா.) என இன்சாரியை
பெற்றமை காண்க.