இன்றி என்ற வினையெச்சம்
‘
விருந்தின்றிக் கழிந்த
பகல்
’ என்றாற் போல, வருமொழி
வல்லெழுத்து மிக்கு முடியும். அஃது ஈறு திரிந்து ‘இன்று’ என
வினைமுற்றுப் போல அமைந்தவழி, வருமொழி வன்கணம் மிகாது இன்னோசை
பயத்தலின் செய்யுளில் பயில வழங்கப்படுகிறது.
எ-டு :
‘உப்பின்று புற்கைஉண்கமா கொற்கையோனே’
‘வழுவின்று நிலைஇய இயற்படு பொருளினும்’
(தொ.பொ. 111. நச்.)
‘பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும்’
(தொ.பொ. 151
நச்.)
‘காய்வின்று அவன்வயின் பொருத்தற் கண்ணும்’
(
தொ.பொ. 151 நச்.)
‘தாவின்று உரிய தத்தம் கூற்றே’
(தொ.பொ. 241 நச்.)
எனத் தொல்காப்பியத்தில் இன்றி என்பது ‘இன்று’ என்று செய்யுளின்பம்
கருதி வழங்கப்பட்டுள்ளது. (தொ. எ. 237 நச்.)
இன்றி என்ற சொல்லிலுள்ள இரண்டு இகரம் செவிக்கு இனிமை யாக
இல்லாததால், ஒன்று உகரமாக மாறியிருக்கவேண்டும். எனவே, அன்றி
என்பதன்கண் உள்ள இகரம் உகரமாகத் திரிய வேண்டுவதில்லை. அத் திரிபு
சற்றுப் பிற்காலத்தது என்ப. அதுவன்றி என்பது அதாஅன்று எனத் திரிந்ததோ
என்பது நோக்கத்தக்கது.