தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்த ஊர் இன்னம்பர். கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஊர் குறித்து சம்பந்தர், அப்பர் பாடல்கள் அமைகின்றன. இன்று இன்னம்பர் என்றே இவ்வூர் அழைக்கப்படுகிறது. அம்பர் என்ற பிற ஊர்ப் பெயரினின்றும் தனித்தறிய இன்’ என்ற அடையைச் சேர்த்தனர் எனலாம். சம்பந்தர் அப்பர் பாடல் பெற்ற தலம். சேக்கிழாரும் தவிர சுந்தரரும் இவ்வூரைக் குறிப்பிடுகின்றார் இப்பாடல்களில் பெரும்பாலும் இன்னம்பர் ஈசர் புகழ்பாடுதல் இருக்கின்றதே தவிர ஞானசம்பந்தரின் ஒரு சில பாடல்களிலேயே இன்னம் பரை புகழும் நிலையைக் காண்கின்றோம். இப் புகழ்ச்சியும் ஒரு சில நிலையிலேயே அமைகிறது..
எண்டிசைக்கும் புகழ் இன்னம்பர் – 353-1
இடி குரல் இசைமுரல் இன்னம்பர் ( 353-4 )
எழி றிகழும் பொழில் இன்னம்பர் – 353-7
ஏத்தரும் புகழணி இன்னம்பர் 353-8
ஏரமர் பொழிலணி யின்னம்பர் 353-10
இவை பொழில் சூழ்ந்த செழிப்பான இடம் என்ற ஒரே ஒரு சிறப்பையே காட்டுகின்றன. நம் தமிழ் நாட்டில், அம்பர். இன்னம்பர் நல்லம்பர் என்ற ஊர்கள் இருத்தலைப் பலர், அறிந்திருத்தல் கூடும் எனக் கூறும் அறிஞர் கருத்தில் பல ஊர்கள் இருப்பதை அறிகின்ற போது அப்பு – நீர் இதனின்றும் அம்பர் என்ற சொல் பிறந்திருக்குமோ எனத் தோன்றுகிறது.