இன்சாரியை வரும் இடங்கள்

1. அ, ஆ, உ, ஊ, ஏ, ஒள – என்ற ஆறு ஈற்றுப் பெயர்களும் உருபேற்கு
மிடத்து இன்சாரியை பெறும்.
எ-டு : விளவினை, பலாவினை, கடுவினை, தழூவினை, சேவினை, வெளவினை,
(தொ.எ.173 நச்.)
2. ஞ், ந் – ஈற்றுச் சொற்கள் உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும்.
வருமாறு : உரிஞினை, வெரிநினை (182)
3. மகரஈற்றுப் பெயர்கள் சில உருபேற்குமிடத்து இன்சாரியை பெறும்.
எ-டு : உருமினை, திருமினை (186)
4. தெவ் என்ற உரிச்சொல் படுத்தல்ஓசையான் பெயராகி உருபேற்கு மிடத்து
இன்சாரியை பெறும். வருமாறு : தெவ் வினை, தெவ்வினொடு; தெவ்விற்கு…..
தெவ்வின்கண் (184)
5. அழன், புழன் – என்ற னகர ஈற்றுச் சொற்கள் உருபேற்கு மிடத்து
இன்சாரியையும் பெறும். வருமாறு : அழனினை, புழனினை (193)
6. ஒற்று இரட்டும் நெடில்தொடர் உயிர்த் தொடர் நீங்கலான பிற தொடர்க்
குற்றியலுகர ஈற்றுச் சொற்கள் உருபேற்கு மிடத்து இன்சாரியை பெறும்.
எ-டு : நாகினை, நாகினொடு; வரகினை, வரகினொடு (எஃகினை, பட்டினை,
பஞ்சினை, சால்பினை) (195)
இவையெல்லாம் ஐந்தனுருபு ஏற்குமிடத்தே இன்சாரியை பெற மாட்டா.
(131)
1. குற்றியலுகர ஈற்று அளவுப்பெயர் முதலியவற்றின் முன் குறை
என்னும் சொல் வருமிடத்து இடையே இன்சாரியை வரும். எ-டு : உழக்கின்
குறை, ஆழாக்கின் குறை, கழஞ்சின் குறை
இவை உம்மைத்தொகைப் பொருளன. உழக்கும் அதனின் குறையும் முதலாகப்
பொருள் கொள்க. உழக்கிற்குறை, ஆழாக்கிற்குறை, கழஞ்சிற்குறை: இவை ஆறாம்
வேற் றுமைப் பொருட்புணர்ச்சி (தொ.எ.167 நச்.)
2. பனை என்ற அளவுப்பெயர் முன்னும், கா என்ற நிறைப் பெயர்
முன்னும் குறை என்ற சொல் வந்து உம்மைத் தொகைப்படப் புணருமிடத்து
இன்சாரியை வரும். வருமாறு : பனையின் குறை, காவின் குறை (169)
3. மக என்ற சொல் மகவின்கை என்றாற்போல இன்சாரியை பெறும்.
(218)
4. பனி என்ற சொல் பனியிற்சென்றான் என்றாற்போல இன்சாரியை பெறும்.
(241)
5. வளி என்ற சொல் வளியிற் சென்றான் என்றாற் போல இன்சாரியை
பெறும். (242)
6. ஆடூ என்ற சொல் ஆடூவின்கை என்றாற் போல இன் சாரியை பெறும்.
(271)
7. மகடூ என்ற சொல் மகடூவின்கை என்றாற் போல இன் சாரியை பெறும்.
(271)
8. சே என்ற பெற்றத்தின் பெயர் சேவின் வால் என்றாற் போல
இன்சாரியை பெறும். (271)
9. மழை என்ற சொல் மழையிற் கொண்டான் என்றாற் போல இன்சாரியை
பெறும். (287)
10. வெயில் என்ற சொல் வெயிலிற் கொண்டான் என்றாற் போல இன்சாரியை
பெறும். (377)
11. இருள் என்ற சொல் இருளிற் கொண்டான் என்றாற் போல இன்சாரியை
பெறும். (402)
12. வண்டு என்ற சொல் வண்டின்கால் என்றாற் போல இன்சாரியை பெறும்.
(420)
13. பெண்டு என்ற சொல் பெண்டின்கை என்றாற் போல இன்சாரியை பெறும்.
(420)
14. பத்து நிலைமொழியாக, ஒன்று – மூன்று முதல் எட்டு ஈறான எண்கள்
– இவை வருமொழியாகப்புணரும்வழி, பதி னொன்று – பதின்மூன்று – பதினான்கு
– பதினைந்து – பதினாறு – பதினேழ்- பதினெட்டு- என இன்சாரியை இடையே
பெறும். (433)
15. பத்து ஆயிரத்தொடு பதினாயிரம் எனவும், ஒன்பது ஆயிரத் தோடு
ஒன்பதினாயிரம் எனவும் புணரும். (435, 470)
16. பத்து நிலைமொழியாக, நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வருமொழியாக
வரினும், ஒன்பது நிலைமொழியாக அவை வரினும் இடையே இன்சாரியை
வரும்.
எ.டு : பதின்கலம், பதின்கழஞ்சு; ஒன்பதின்கலம், ஒன்பதின் கழஞ்சு
(436, 459)
17. ஒருபஃது, இருபஃது முதலியன ஆயிரத்தொடும் நிறைப் பெயர்
அளவுப்பெயர்களொடும் புணருமிடத்து இடையே இன்சாரியை வரும்.
வருமாறு : ஒருபதினாயிரம், இருபதினாயிரம், ஒருபதின் கழஞ்சு,
ஒருபதின்மண்டை, இருபதின் கழஞ்சு, இருபதின் மண்டை (476, 477)
18. ஆ, மா- என்ற பெயர்கள் உருபேற்குமிடத்து வரும் இன்சாரியையின்
இகரம் கெடுதலுமுண்டு.
வருமாறு : ஆவினை, ஆனை; மாவினை, மானை (120)
பதின்கலம் – பதிற்றுக்கலம் என்றாற்போல, இன்சாரியை ‘இற்று’ எனத்
திரிதலும் கொள்க. (121 நச். உரை)