பெயர்ச்சொல் இன்சாரியை பெற்றவிடத்து இரண்டாம் வேற்றுமை யுருபு
தவறாது வருதல் வேண்டும் என்று தொல். கூறும். (தொ.எ.157 நச்.) ஆயின்
தொல்காப்பியத்திலேயே ‘சார்ந்துவரல் மரபின் மூன்று’ (1) (மரபினையுடைய
மூன்று), ‘ஆயிரு திணையின் இசைக்குமன’ (சொ.1) (திணையினையும் இசைக்கும்)
என, இன்சாரியை பெற்று இரண்டனுருபு விரியா மலேயே சொற்றொடர்
அமைந்திருத்தலைக் காணலாம்.
‘மறங்கடிந்த அருங்கற்பின்
சில்சொல்லின் பல்கூந்தல்… துணைத் துணைவியர்’
(புறநா.166)
கற்பினையும் சொல்லினையும் கூந்தலையுமுடைய துணைவி யர் – என
இலக்கியத்திலும் இன்சாரியை வந்து ஐஉருபு விரியாத பொருட்
புணர்ச்சியையும் காண்கிறோம். (தொ. எ. 157நச். உரை)