இன் என்னும் ஐந்தனுருபு இன்சாரியை பெற்றுப் புணர்தல்
இன்னோசைத்தன்று என்று கருதிப்போலும், தொல்காப்பிய னார் இன்உருபு
இன்சாரியை பெறாது என்றார். அவர் கருத்துப்படி, ஊரின் நீங்கினான் –
என்று கூறுவதே முறை; ஊரினின் நீங்கினான் எனல் பிழை.
ஆயின், தொல்காப்பினார்க்குப் பிற்பட்ட காலத்தே உலகவழக்கில்
‘பாம்பினிற் கடிது தேள்’ என்பது போலவும், செய்யுள்வழக்கில் ‘கற்பினின்
வழாஅ நற்பல உதவி’
(அகநா.86), ‘அகடுசேர்பு பொருந்தி
அளவினிற் றிரியாது’
(மலைபடு.33) எனவும் அருகி
வருவனவும் காணப்படுகின்றன. (தொ.எ. 131 நச். உரை)