இந்தளூர்

திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இடம், இன்றைய சோழ நாட்டைச் சார்ந்தது. மாயூரம் நகரின் வடக்கு முனை யில் உள்ளது இத்திவ்விய தேசம் என்ற குறிப்பு அமைகிறது. எனவே தஞ்சாவூர் மாவட்டம் சார்ந்தது என்பது தெரிகிறது. இவ்வூர்ப் பெயருக்கு விளக்கம் சொல்வோர், இந்திரன் சாப விமோசனம் ஆனதால் ஊருக்கு இந்தளூர் எனப்பெயர் உண்டாயிற்று எனச் சுட்டுகின்றனர். “மயிலாடுதுறை என்ற ஊரின் அருகேயுள்ள இவ்வூர் திருமால் கோயில். சிறப்பு காரணமாக புராணக்கதை தொடர்பாக இப்பெயரால் செல்வாக்கு பெற்றதா அல்லது,
“நாடுதும் வாநெஞ்சமே ! நாராயணன் பதிகள்
கூடுதும் வா மெய்யடியார் கூட்டங்கள் – சூடுதும் வா
வீதியிந்தளத் தகிலின் வீசு புகை வாசம் எழும்
ஆதியிந்தளூரான் அடி”
என்ற பாடல் கருத்து தரும் இந்தளப் புகை நிரம்பிய அடி என்று குறிக்கு மாற்றான் இந்தள மரங்கள் நிரம்பிய காடு என்ற நிலையில் இந்தளூர் எனச் சுட்டப்பட்டு, திருமால் கோயில் சிறப்புடன், புராணக் கதையை இதனுடன் இணைத்து விட்டனரா என்று நோக்கின், தாவரப்பெயர் காரணமாக பெயர் தோன்றியிருக்கக்கூடும் என்பதே பொருத்தமாக அமைகிறது. புராணக்கதை சார்பாக இங்குள்ள குளத்தை இந்து புட்கரணி என்று அழைக்கின்றனர். மேலும் வாசனை மரம் மிகுந்த இடம் என்பதற்கு ஏற்றாற் போன்று. சுகந்தாரணிய க்ஷேத்திரம் என்ற வடமொழிப் பெயரும் அரணாகின்றது. எனினும் இதற்கும் புராணக் கதையையே சுட்டுகின்றனர்..