ப் ம் வ் என்னும் மெய்கள் இதழ் இயைதலால் பிறக்கும் ஒலிகள் ஆதலின்,இவற்றாலேயே இயைந்த பாடற்கண் ‘இதழியைந்த ஓட்டியம்’ என்னும் சொல்லணிகாணப்படும்.எ-டு : ‘பம்மும்பம் மும்பம்மு மம்மம்ம மைமாமைபம்முமம்ம மும்மேமம் பாம்’மை பம்மும்; பம்மும் பம்மும்; அம்மம்ம! மாமை பம்மும் அம்மமும் ;ஏமம் பாம் – எனப் பிரித்து உரை செய்க.(பாகனே! நாம் ஊர் திரும்பிச் செல்வதன் முன்) மேகங்கள் (நம்ஊர்க்குச் சென்று) படியும்; விண்மீன் கணங்களும் மறைவதால் (வழி இருண்டுவிட்டது) ஐயோ! ஐயோ! பாலையுடைய தலைவிநகில்களும் மாமை மறைந்து பசலைபடிந்துவிடும். (கார்காலத் தொடக்கத்தில் மீண்டுவருவேன்“ என்ற என்சொற்கள் என்னாம் என்பது குறிப்பெச்சம்) என்ற இப்பாடற்கண், இதழ்குவிந்த ஓட்டியம் அமைதற்குரிய ப் ம் வ் என்னும் மெய்யெழுத்துக்களேவந்துள்ளன.மை – மேகம்; பம்முதல் – படிதல்; மறைதல்;பம் – விண்மீன்கள்; அம்மம் – நகில்கள்;ஏமம் – பொன் நிறத்த பசலை (மா. அ. பா. 772)