இடவுருபுகள் உருபினை ஏலாதும் ஏற்றும் பெயராய் நிற்றலேயன்றி, உருபுதொக்க பெயராதலும் உண்டு.எ-டு : கண் அகல் ஞாலம் – இடம்அகன்ற உலகம்கண் அகன் பரப்பு – இடம் அகன்ற பரப்புஇவற்றுள் கண் என்பது உருபு ஏலாத இடப்பெயராக நின்றது. கடையைக்காப்பான், இடையைக் காப்பான், தலையைக் காப்பான் என்பவற்றுள் கடை இடைதலை – என்பன உருபேற்றமை காண்க.முன்பிறந்தான் – பின்பிறந்தான் – தலைமழை – கடை காப்பான் -போன்றவற்றில் இடவுருபுகள் ஏற்ற வுருபுகள் தொக்கு நின்றன.உள்ளூர் மரம் – கீழ்நீர் ஆமை – மீகண் பாவை – என்பவற்றுள், ஊருள் -நீர்க்கீழ் – கண்மீ – என்பன உருபு முன்னும் சொல் பின்னுமாக முன்பின்மாறி நின்றன.இடவுருபுகள் வேறுருபும் சொல்லுருபும் ஆதல் உள.எ-டு : ஊரில் இருந்தான் – ‘இல்’ என்பது ‘கண்’ என்பதற்கு வேறுஉருபாய் வந்தது.ஊர்த்திசை இருந்தான் – ‘திசை’ இடப்பொருளில் வந்த சொல்லுருபு. (இ.கொ. 18)