ஆன்கன்று, மான்றலை, கோன்குணம், வண்டின்கால், நாயின் கால்,
தேரின்செலவு, யாழின்புறம் என வேற்றுமைக்கண் சாரியை இடைச்சொற்கள் (ன்,
இன்) இயல்பாயின. தடந் தோள் என அகரஈற்று உரிச்சொல் (தட) மெல்லெழுத்து
மிக்கது. மழகளிறு, உறுகால் (நற். 300) என உரிச்சொல் (மழ, உறு)
இயல்பாயின. அளிகுலம் (கோவையார் 123), வயிரகடகம், தாமகண்ணன், கனகசாதி,
கமலபாதம், தனதடம் என வட சொல் இயல்பாயின. இல்முன் – முன்றில், படைமுன்
– முன்படை, கண்மீ – மீகண், பொதுவில் – பொதியில், வேட்கை நீர் – வேணீர்
(கலி. 23), வேட்கை அவா – வேணவா (நற். 61), பின் – பின்றை என்னும்
தொடக்கத்துப் போலிமொழிகளும், அருமருந்தன்னான் – அருமந்தான், கிழங்கன்ன
பழஞ்சோறு- கிழங்கம் பழஞ்சோறு, குணக்குள்ளது – குணாது, தெற்குள்ளது –
தெனாது, குடபாலது – குடாது, மலையமானாடு – மலாடு, சோழனாடு – சோணாடு,
பாண்டியனாடு – பாண்டி நாடு, தஞ்சாவூர் – தஞ்சை, பனையூர் – பனசை,
சேந்தமங்கலம் – சேந்தை, ஆற்றூர் – ஆறை, ஆதன்தந்தை – ஆந்தை, பூதன்தந்தை
– பூந்தை, வடுகன்தந்தை – வடுகந்தை என்னும் தொடக்கத்து மரூஉமொழிகளும்,
நிலைவருமொழிகளில் ஏற்கும் செய்கை அறிந்து முடிக்க. இவற்றுள்,
அருமந்தான் முதலானவற்றை வலித்தல் முதலிய விகாரங்களான் அமைக்க
என்பாரும், ஆந்தை முதலானவற்றை இலக்கண மொழிகளாக வேறெடுத்து
முடிப்பாரும் உளர். (நன். 238 மயிலை.)