வல்லினம் போன்று வல்லென்று ஒலியாமலும் மெல்லினம் போன்று மெல்லென்று
ஒலியாமலும் இடைநிகர்த்ததாய் ஒலித்தலானும், இடைநிகர்த்ததாய
மிடற்றுவளியான் பிறத்தலானும் இடையினம் என்பது காரணப் பெயராயிற்று.
மேல் யரலவழள என்ற ஆறு மெய்களையும் இடையெழுத்து என்ற பெயரான் ஆள்வதற்கு
நூல்மரபில் பெயரிடப்பட்டது. ஆதலின் இடையெழுத்து என்பது ஆட்சியும்
காரணமும் நோக்கிய குறி. (தொ. எ. 21. இள., நச். உரை).
உயிரெழுத்துக்கள் வளியைத் தடுக்காமல் வெளிவிடுதலின், தாமே ஒலிக்க
இயல்கின்றன. வளியை நன்கு தடுத்தலின் வல் லெழுத்து மெல்லெழுத்துக்கள்
தாமே ஒலிக்க வருவனவாய் இல்லை. சிறிதளவு தடுத்தலின், இடையெழுத்துக்கள்
தாமே ஓராற்றான் ஒலித்தல் கூடும். ஒலிக்கும் திறத்தில் உயிரெழுத்துக்
கட்கும் வல்லெழுத்து மெல்லெழுத்துக்கட்கும் இடைப்பட் டிருத்தலானே ய ர
ல வ ழ ள – க்கள் இடையெழுத்து எனப் பட்டன. (எ. ஆ. பக். 11.)
முழுதும் வாய்திறக்க உண்டாம் உயிருக்கும், வாய் முழுதும் மூட
உண்டாம் வல்லின மெல்லினங்கட்கும், வாய் சிறிது மூடியும் சிறிது
திறந்தும் இருத்தலால் உண்டாம் ய ர ல வ ழ ள – க்கள் இடையாய் நிற்றலின்
இடையெழுத்து எனப்பெயர் பெற்றன. (எ. கு. பக். 29)