இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரப் புணர்ச்சி

இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரச் சொற்கள் அல்வழிக் கண்ணும்
வேற்றுமைக்கண்ணும் வன்கணம் வரினும் இயல்பாகப் புணரும். எ-டு : தெள்கு
கடிது, தெள்கு சிறிது; தெள்குகால், தெள்கு சிறை (தொ. எ. 425, 413
நச்.)
வருமொழி உயிர்க்கணம் வரின், குற்றியலுகரத்தின்மேல் உயிரேறி
முடியும். எ-டு : தெள்கு + அடைவு = தெள்கடைவு, தெள்கு + அருமை =
தெள்கருமை (தொ. எ. 413 நச்.)
இடைத்தொடர்மொழிக் குற்றியலுகரச் சொற்கள் உருபுக ளொடு புணரும்வழி
இன்சாரியை பெறும். எ-டு : தெள்கு + ஐ
> தெள்கு + இன் + ஐ =
தெள்கினை; தெள்கு + ஆல்
> தெள்கு + இன் + ஆல் =
தெள்கினால்; அச்சாரியை பொருட் புணர்ச்சிக் கண்ணும் வரும். எ-டு :
தெள்கின்கால், தெள்கின் ஞாற்சி (தொ. எ. 195 நச்.)