ஒரு காரணம் பற்றாது ஒரு பொருட்குத் தொன்றுதொட்டு இடப்பட்டு வரும்
பெயர் இடுகுறி எனப்படும். அஃது இடு குறிப் பொதுப்பெயர் எனவும்,
இடுகுறிச் சிறப்புப்பெயர் எனவும் இருவகைத்து.
மரம்: இடுகுறிப் பொதுப்பெயர்; பலா – இடுகுறிச் சிறப்புப்
பெயர்.
ஒரு காரணம் பற்றி ஒருபொருட்கு அமையும் பெயர் காரணப் பெயர்
எனப்படும். அதுவும் பொது சிறப்பு என இருவகைத்து.
அணி : காரணப் பொதுப்பெயர்; முடி: காரணச் சிறப்புப் பெயர்.
இனி, காரண இடுகுறிப் பெயராவது காரணம் பற்றி அமையும் பெயர்,
அக்காரணம் நிகழும் எல்லாவற்றிற்கும் பெயராகாது அவற்றுள் ஒன்றற்கே
இடுகுறிப்பெயர் போல வருவது.
எ-டு : முக்கண்ணன் – முக்கண்ணையுடைய இறைவர் பலருள் சிவனுக்கே
பெயராவது.; அந்தணர் – கருணையுடைய பலருள் பார்ப்பாருக்கே பெயரா வது;
மறவர் – வீரமிக்க பலருள் ஒரு சாதியார்க்கே பெயராவது; முள்ளி –
முட்செடிகள் பலவற்றுள் ஓரினச் செடிக்கே பெயராவது. (நன். 62
இராமா.)