இகரஈற்று உயர்திணைப்பெயர் வன்கணம் வரின் மிக்குப் புணரும். எ-டு :
எட்டிக்குமரன், நம்பிப்பேறு (தொ. எ. 154 நச்.)
இகரஈற்றுப் பொதுப்பெயர், இருபெயரொட்டாயின் மிக்கும், எழுவாய்த்
தொடராயின் இயல்பாயும் வன்கணம் வந்துழிப் புணரும். எ-டு :
சாத்திப்பெண், சாத்தி பெரியள் என முறையே காண்க. (தொ. எ. 155 நச்.)
இவை அல்வழி முடிபு.
இகரஈற்று அஃறிணைப்பெயர், வேற்றுமைக்கண் வன்கணம் வரின் மிக்கும்,
சிறுபான்மை உறழ்ந்தும் புணரும். எ-டு : கிளிக்கால், கிளிச்சிறகு –
மிகுதி; கிளிகுறுமை, கிளிக்குறுமை – உறழ்ச்சி (தொ. எ. 235 நச்.)
இகரஈறு இகரம் கெட்டு அம்முச்சாரியை பெறுதலுமுண்டு.
எ-டு : கூதாளி + கோடு = கூதாளங்கோடு; கணவிரி + கோடு =
கணவிரங்கோடு (தொ. எ. 246 நச்.)
இகரஈறு வருமொழியோடு இகரம் கெட்டுப் புணர்தலு முண்டு. எ-டு : கட்டி
+ இடி = கட்டிடி; கட்டி + அகல் = கட்டகல் (தொ. எ. 246. நச்.)
சில இகரஈறு அம்முப் பெறாது மெல்லெழுத்துப் பெறுதலு முண்டு. எ-டு :
புளிங்காய், புளிம்பழம் (தொ. எ. 246 நச்.)
இவை வேற்றுமை முடிபு.