ஆவூர்

ஆமூர் போன்று பண்டு தொட்டே தெரியவரும் ஊர் ஆவூர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. அங்கணர்க் கிடமாகிய பழம்பதி ஆவூர் ( 34-376-4 ) என்ற சேக்கிழார் கூற்றும் இவ்வூர் பழமையை உணர்த்தும் ஞானசம்பந்தர் பாடல் இங்குள்ள சிவன் கோயில் சிறப்பைச் சுட்டுகின்ற தலம் ( பதி-8 ). மேலும், சிவபெருமான் திருவந்தாதியில் கபில தேவ நாயனாரும் இவ்வூரைச் சுட்டுகின் றார், ( 13 ) ஆ வழிபட்டமையாலும் இறைவன் பெயராலும் ( பசுபதீஸ்வரர் ) பெற்ற பெயர், கோயில் பெயரே ஊருக்கும் வழங்கப்படுகிறது என்ற எண்ணத்தையும் காண்கின்றோம். இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள இவ்வூர்ப் பெயர் பற்றி நம் பண்டை இலக்கியத்திலும் எண்ணங்கள் உண்டு. பழம்பதி என்று சேக்கிழார் கூறும் தன்மை, ஒன்றாக இருக்கலாம் என்ற எண்ணத்தைத் தருகின்றன. இதனைப்பற்றிப் பேசும் போது ஆ என்பது பசுவையும், ஆச்சா மரத்தையும் குறிக்கும் சொல். எனவே விலங்குப் பெயர் அல்லது மரப்பெயர் அடிப்படையில் தோன்றியதாக இருக்கவேண்டும். என்பர்.
ஆவின் அருங்கன்றுறையும் ஆவடு தண்டுறை ( பெரிய திருமூல -9 )
ஆவுக்கருளும் ஆவடு தண்டுறையார் பாதம் ( பெரிய 27-293 )
என்று சுட்டுவதும் இத்தொடர்பை வலியுறுத்த வல்லன. திருமந்திரத்தில் சீருடையார் சிவனாவடு தண்டுறை, சீருடையான் பதம் சேர்ந்திருந்தேனே ( 139 ) எனப் போற்றப்படும் இவ்வூர், பின்னர், ஞானசம்பந்தர், சுந்தரர் திருநாவுக்கரசர், நம்பியாண்டார் நம்பி போன்ற பலராலும் சிறப்பிக்கப்பட்டுள்ளதையும் காண்கின்றோம். சாத்தனூரில் உள்ள கோயில் ஆவடுதுறை என்பார் தி.வை சதாசிவப்பண்டாரத்தார். எனினும் இன்று ஆவடுதுறை என்ற கோயிற் பெயரே செல்வாக்கு பெற்றுவிடக் காண்கின்றோம்.