ஆவும் ஆயனும் – என இனம் அல்லாததனோடு எண்ணின மையான் வழுவாய்,வியங்கோள்வினை இருதிணைக்கும் முடிவு ஏற்றலின் வழுவமைதி ஆயிற்று. இதுவியங்கோளைக் கொண்டு முடியும் எண்ணுப் பெயர். உம்மையெண்ணும் ‘என’எண்ணும் தொகைபெற்றும் பெறாதும் வரும். இரு திணையையும் எண்ணித் தொகைகொடுத்தற்கண் இடர்ப் பாடு உண்டு ஆதலின், தொகை பெற வேண்டும் என்ற வரையறை இல்லாத உம்மையெண்ணான் எண்ணப்பட்ட பெயர் கள் கொள்ளப் பட்டன. (தொ.சொ. 45 இள. உரை)