ஆலி

திருவாலி என்று அழைக்கப்படும் தலம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள. வைணவக் கோயில் தலம் இது. திருமகள் எம் பெருமானை ஆலிங்கனம் செய்தமையால் ஆலி ஆயிற்று என்பர் ( நாலா – பக். 835 ) ஆலிநகர்க் கதிபதியே ( நாலா-725 ) என குல சேகராழ்வார் இத்தலத்து இறையைப் பாடுகின்றார்.
சோலைத்தலைக் கணமாமயில் நடமாட
மழைமுகில் போன்றெழுந்து, எங்கும்
ஆலைப்புகை கமழும் அணியாலி அம்மானே (நாலா — 1189 )
புன்னை மன்னு செருந்தி வண்பொழில்வாய்
அகன்பணைகள் கலந்தெங்கும்
அன்னம் மற்றும் வயலணி ஆலி யம்மானே ( நாலா – 1191 )
என திருமங்கையாழ்வார் பாடல்களில், இவ்வூரின் செழிப்பு தெரிய வருகிறது. ஆலைகள் இருந்தன என்பதை நோக்க ஆலையே ஆலியாயிற்றோ என்ற எண்ணம் தோன்றுகிறது.