யாழ்ப்பாணத்திலே நல்லூரிலே, வேளாளர் குலத்திலே, சாரலிவாகனசகனம் ஆயிரத்தெழுநூற்று நாற்பத்தைந்தாம் வருஷத்திலே, கந்தப்பிள்ளை யென்பவருக்குப் புத்திரராக அவதரித்தவர். இவர், தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என்னும் முப்பாஷைகளையுங்கற்று, அப்பாஷைகளிலே வியவகாரசத்திவந்த பின்னர், தமிழையே முற்றக்கற்கும் பேரவா வுடையராயினார். அதனால், இவர் அக்காலத்திலே பிரபலவித்துவான் களாய்விளங்கிய சரவணமுத்துப்புலவர் முதலியோரிடத்துச்சில இலக்கண விலக்கியங்களைப் பாடங்கேட்டுத், தமக்குப்பாடஞ் சொன்ன ஆசிரியர்களும் நாணத்தக்க நுண்ணியபுலமையும், கூர்,ந்த விவேகமும், வாக்குவன்மையும், ஒப்பற்ற ஞாபகசத்தியும், ஆசாரசீலங்களும், நற்குணநற்செய்கைகளும், சிவபக்தியும், சமயாபிமானமும், சபையங்சா ஆண்மையும் பெரிதுமுடையராய் விளங்கினார். அக்காலத்திலே, இவர் ஆங்கிலக்கல்வியினாலே தமிழ்க் கல்வி அபிவிருத்தியடையாது குன்றிப் போவதை நோக்கிகப்பரிதபித்து வண்ணார் பண்ணையிலே ஒருதருமத் தமிழ்ப் பாடசாலை தாமும் இடையிடையே உபாத்தியாயராகவிருந்து கல்வி கற்பிப்பாராயினர். அதுகண்டு, நாற்றிசை யினின்றும் சைவப்பிள்ளைகள் அங்கே சென்று தமிழ்கற்கத் தொடங்கினார்கள். அதனால் அப்பாடசாலை ஓங்கி வளர்வதாயிற்று. அதுகாறும் பனையேட்டி லெழுதி வழுக்களோடு கற்றும் கற்பித்தும்வந்த நிகண்டு முதலிய நூல்களை வழுக்களைந்து சுத்த பாடஞ் செய்து காகித புஸ்தகமாக அச்சிடுவித்துத், தம்பாடசாலை மாணாக்கருக்கும் மற்றோர்க்கும் உபயோகமாகும் படி செய்தனர். காகிதபுஸ்தகங்கள் வரவே, தமிழ்க் கல்வியபிமானம் வரவர ஓங்குவதாயிற்று. இப்புஸ்தகங் களினாலே அவருடைய பெயர் தமிழ்நாடெங்கும் வியாபித்து விளங்கிற்று பாடசாலைகளுக்கு உபயோகமாகும்படி வசனநடையிலே பாலபாடங்களெழுதி அச்சிடுவித்தார். எவருக்கும் உபயோகமாகும்படி பெரியபுராண முதலிய நூல்களை வசனமாக்கினார். கந்தபுராணம், வில்லிபுத்தூரர்பாரதம், திருக்குறள் பரிமேலழகருரை, திருக்கோவையாருரை முதலிய அரும்பெரும் நூல்களை யெல்லாம் வழுக்களைந்து சுத்தபாடமாக்கி அச்சிட்டு லகத்துக்கு பகரித்தார். அவற்றுள், திருக்குறள் பரிமேலழகருரையும், திருக்கோவையாரையும், இராமநாதபுரத்து மகாராசாவினது மந்திரியாகிய பொன்னுச்சாமித்தேவர் இவரை தமது நாட்டிற் சந்தித்த இவரை தமது நாட்டிற் சந்தித்த பொழுது, இந்நூல்களை ஆராய்ச்சிசெய்து சுத்தபாடமாக்கி அச்சிடவல்லார் தங்களையன்றி,ப் பிறறொருவரையுங் காண்கிலோம் என்று கூறி, அதற்கு வேண்டும் பொருள் கொடுத்து இவரைக் கொண்டு திருத்தி அச்சிடுவிக்கப்பட்டன. திருக்குறள், திருக்கோவையார், நன்னூல் விருத்தியுரை, தொல்காப்பியச் சொல்லதிகாரம், சேனாவரையருரை முதலிய நூல்கள் இவராற்றிருததி, அச்சிடப்படாதிருக்குமாயின், இந்நாளிலும் அவற்றை நாம் ஓலைப் புத்தகங்களிலேயே படித்துச் சங்கடப்பட்டு மலையவேண்டியவர்களாவோம். இந்நூல்களைச் சுத்தபாடமாக்கித் தரும்பொருட்டு இவர் அவதாரஞ் செய்தாரென்றே நாம் கொள்ளுதல் வேண்டும். இவர் அவதாரஞ் செய்திலரேல், அவற்றை நாம் இக்காலத்திற் காண்பது மில்லையாம். இவர், யாழ்ப்பாணத்தில் மாத்திரமன்று, சிதம்பரத்திலும் ஒரு வித்தியாசாலை ஸ்தாபித்து, அதுவுந்தளராமல் நடைபெறும் பொருட்டு அதற்கும் முதனிதியமைத்து வைத்தார். அவ்வித்தியாசாலையைப் போலவே, தளராமல் நடைபெற்று வருகின்றது. இவர் தமிழபிவிருத்தியின் பொருட்டும், சைவசமயாபி விருத்தியின் பொருட்டும் தம்மாயுட்கால முழுவதையும் போக்கியவர். இவர் தாமீட்டிய செல்வத்தையெல்லாம் ஒருசிறிதும் புறத்தே போகாவண்ணம் இவ்விரண்டிற்குமே ஆக்கிவைத்தார். இவ்விரண்டையும் பரிபாலிக்கும் பொருட்டே தஞ்சுற்றத்தாருடைய தொடர்பை முற்றத்துறந்தார். ஏனைய கல்விமான்களைப் போலச் சைவசீலங்களைப் போச்சளவிற் காட்டாமல், தம்மொழுக்கத் தாலும் எடுத்து நாட்டினவர். இறக்கும்போது இவருக்கு வயசு 57. இவர் எவ்விஷயங்களையும் ஐயந்திரிபற வெடுத்து மாணவர்க்குப் போதிப்பதிலும், சமயவிஷயமே யாயினும் பொதுவிஷயமேயாயினும் ஒன்றை யெடுத்துத் தீரவிசாரித்துத் தர்க்க முறையாகப் பிரமாணத்தோடு எப்பெருஞ் சபையிலும் எத்துணைப் பெருமாற்ற லுடையோரும் மற்றெத்திறத்தினரும் அங்கீகரிக்கும் வண்ணம் நாட்டிப் பிரசங்கிக்கும் சாதுரியத்திலும், கேட்போருள்ளத்தைப் புறஞ் செல்ல விடாது தம்மாட்டுக்கவரும் வாக்கு வன்னையிலும், கடன்மடைதிறந்தா லொப்பச் சொற்பஞ்சமின்றி வாக்குமழை பொழியும் அற்புத ஆற்றலிலும், இவர்க்கிணையாவா ரொருவரை நாம் இன்னுங் காண்கிலேம்