நெடுமுதல் குறுகும் சொற்களாகிய தாம் – யாம் – நாம் – தான் –
யான் – நீ – என்ற சொற்கள், உருபேற்குமிடத்தும் உருபு தொக்க பொருட்
புணர்ச்சிக்கண்ணும், முதல் குறுகித் தம் – எம் – நம் – தன் – என் –
நின் – என்றாகி, அகரச்சாரியை பெற்றுத் தம, எம – முதலாக நின்று, ஆறன்
உருபொடு புணரும். ஆறாம் வேற்றுமையுருபுகள் அது, அ என்பன. அகரத்தொடு
புணரும்- வழி உடம்படுமெய் பெற்றுத் தமவ – எமவ – நமவ – தனவ – எனவ –
நினவ என முடியும். அது உருபொடு புணருமிடத்து, அது உருபின் அகரம் கெட,
தம + அது
> தம + து = தமது
என்றாற்போலப் புணரும் என்பர் தொல்காப்பியனார். (எ. 115 ந.)
நன்னூலார் நிலைமொழியின் ஈறு அகரம் பெறும் என்றோ, வருமொழியாகிய
அதுஉருபின் அகரம் கெடும் என்றோ கூறாது வாளா விடுத்தார்.
நன்னூலாருக்கு, தாம் + அது = தமது எனப் புணரும். தனிக் குறில் முன்
ஒற்று ஆறாம் வேற்றுமைக்கு இரட்டாது என்று அவர் விதித்தார்.
கன்னடமொழியில், தனது – தமது – தன்உயிர் – தம்உயிர் முதலியவற்றைத்
தொல். கூறுவது போலவே, தன் + அ + அது, தம் + அ + அது, தன் + அ + உயிர்,
தம் + அ + உயிர் என்று பிரித்துக் கூட்டுகின்றனர். அம் மொழியில் அகரம்
ஆறன் உருபாகும். தெலுங்கில் பன்மை ஏற்ற பெயர்களுக்கு அகரமே உருபாக
வருகிறது. தமிழிலும் ஆறன்பன்மை உருபு ‘அ’ என்று நன்னூலாரும்
கூறியுள்ளார். ‘அது’ அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயராதலின், உயர்திணைக்கு
அது சாலாது என்று, நம்பியது மகன் என்னாது, நம்பிக்கு மகன் என நான்க
னுருபினை இணைத்தனர்.
ஆறாம் வேற்றுமைக்கு நன்னூலார் ஆது என்ற உருபும் கூறினார்.
தன் + அ + அது
> தன + அது = தனாது; மர + அடி
= மராடி இரண்டு அகரங்கள் ஆகாரமான வடிவமே அது. இந்த ஆது உருபு தன் –
என் – நின் – என்பனவற்றிற்கே வருவது; இராம னாது – கண்ணனாது எனப் பிற
பெயரொடு வாராது. இதனை நோக்க, நெடுமுதல் குறுகும் மொழியிறுதியில் வரும்
அகரம் – உருபு முதலெழுத்தாகிய அகரம் இரண்டும் சேர்ந்து ‘ஆ’ ஆக,
அதுஉருபை அதன்உண்மை நோக்காது ஆது என்றதோர் உருபாக நன்னூலார்
குறிப்பிட்டது போதரும். (எ. ஆ. பக். 96.)