ஆறன்உருபுகள்

அது என்னும் ஆறாம் வேற்றுமையுருபு ஆது எனவும் அ எனவும் திரிந்துவருதலால் ஆறன் உருபு ஒன்றே என்பது நேமி நாத நூலார் கருத்து. நன்னூலார்அது ஆது என்பன ஒருமை யுருபு எனவும் அகரம் பன்மையுருபு எனவும் கொள்வர்.(எனது தலை, எனாது தலை, என கைகள்)வரலாறு : சாத்தனது வாள், கொற்றனது வேல் – இவை பிறிதின்கிழமை.தற்கிழமை ஐந்து வகைப்படும், ஒன்று பல குழீஇய தற்கிழமையும் – வேறுபல குழீஇய தற்கிழமையும் – ஒன்றியல் தற்கிழமையும் – உறுப்பின்தற்கிழமையும் – மெய் திரிந்தாகிய தற்கிழமையும் என. அவை வருமாறு:ஒன்று பல குழீஇய தற்கிழமை – எள்ளது குப்பை;வேறு பல குழீஇய தற்கிழமை – படையது குழாம்;ஒன்றியல் தற்கிழமை – நிலத்தது அகலம்;உறுப்பின் தற்கிழமை – யானையது கோடு;மெய் திரிந்தாகிய தற்கிழமை – எள்ளது சாந்து;பிறவும் அன்ன.‘அது’ விகாரப்பட்டு ஆது என நின்று, நினது குதிரை – நினாது குதிரை,எனது வேல் – எனாது வேல் – என வரும். ஆறாம் வேற் றுமை அகரமாய்நிற்கவும் பெறும். அவை வரு மாறு : உத்திய கண் கரிய, கோளரிய கண் பெரிய,யானைய கோடு பெரிய, ஆனேற்ற கோடு கூரிய – என்பன. (நேமி. வேற். 5உரை)