ஆர் என்பது பலர்பால் வினைமுற்று இறுதிநிலையாக வரும்; இயற்பெயர்உயர்திணைப் பெயர்களின் முன்னர் உயர்த்துதற் பொருட்டாய் நிகழும்.எ-டு : சாத்தன், நரி – சாத்தனார், நரியார் :இயற்பெயர்; தொண்டன் – தொண்டனார் : உயர்திணைப் பெயர்; வந்தார் -பலர்பால் வினைமுற்று விகுதி.உம்மையின் பின்னரும் உம் ஈற்றின் பின்னரும் இவ் விடைச் சொல்அசைநிலையாக வரும்.எ-டு : ‘பெயரி னாகிய தொகையுமார் உளவே’ (சொ. 67) -உம்மைப் பின் ‘ஆர்’ அசைநிலை.‘எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே’ (எ-டு) – உம் ஈற்றின் பின்‘ஆர்’ அசைநிலை.ஆர் என்னும் இடைச்சொல்லை ஏற்ற பெயர் பலர்பால் வினையையே கொண்டுமுடியும். சாத்தனார் வந்தார், தொண்டனார் வந்தார் – எனக் காண்க. (தொ.சொ. 270, 271 சேனா. உரை)