திருவாரூர் என தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஊர் இது. ஆர் என்ற மலரைப்பற்றி ஆத்திமாலையைப் பற்றித் தொண்டு தொட்டே கண்டாலும், இவ்வூரின் பெருஞ்சிறப்பை இடைக் காலத்தேதான் காண்கின்றோம், திருவாரூரை மனுநீதிச் சோழன் ஆண்டான் என்றக் குறிப்பு, சங்க காலத்தே இவ்வூர் சிறப்புடன் திகழ்ந்துள்ளது என்பதையுணர்த்தும். ஆரூர் என்ற இப் பெயரைக் காண இது ஆத்திமரங்கள் நிறைந்த ஊராக இருக்கலாம் எனவே தோன்றுகிறது. பிற பெயர்க்காரணங்களைக் காட்டிலும் இதுவே பொருத்தமாகவும் அமைகிறது சோழ மன்னர் களால் பெருஞ்சிறப்பாகக் கருதப்பட்ட, இவ்வூரின் சிறப்பு காட்டும் நம் இலக்கியச் சான்றும் மிகுதியாக அமைகின்றன. கல்வெட்டிலும் திருவாரூர் என்றே இத்தலம் பெயர்படும். தேவார மூவர் களால் மட்டுமல்லாது சேக்கிழாராலும் மாணிக்கவாசகர், நம்பியாண்டார் நம்பியாலும். பரணதேவ நாயனார், ஐயடிகள் காடவர்கோன், கபில் தேவ நாயனார். சேரமான் பெருமாள் நாயனார் போன்ற பலராலும் பாடப்படும் தன்மை இதன் மதிப்பினைத் தெளிவாக்கும். அல்லல் நோய் தீர்க்கும் அரு மருந்தாக இங்குள்ள சிவனை மக்கள் கருதிய நிலையும் (சிவபெருமான் திருவந்தாதி -20 ) சிவபுரியென அதனைக் கருதிய நிலையும் ( பெரிய கழற்- 2 ) தேனமர்ச் சோலையுடன் இது திகழ்ந் தமையினையும் ( திரு கீர்த்தி 73-4 ) செம்பொற் புரிசையுடன் காணப்பட்டமையினையும் (சிவபெருமான் திருவந்தாதி- 98 ) நோக்க, இவ்வூர் பற்றிய மக்கள் மனநிலையும் வெளிப்படும். இவ்வூர்ப் பழமையையும், சிறப்பையும்
சொன்ன நாட்டிடைத் தொன்மையில் மிக்கது
மன்னு மாமலராள் வழிபட்டது
வன்னியாறு மதிபொதி செஞ்சடைச்
சென்னியார் திருவாரூர்த் திருநகர் – பெரிய – 4-1
காதன் மங்கை யிதயகமலமாம்
மாதொர் பாகனார் ஆரூர் மலர்ந்ததால் ( பெரிய 2-33 )
நில மகட்கு அழகார் திருநீள் நுதல்
திலகம் ஒப்பது செம்பியர் வாழ்பதி
மலர் மகட்கு வண்தாமரை போல் மலர்ந்
தலகில் சீர் திருவாரூர் விளங்குமால் ( பெரிய 4-12 )
போன்ற பாடல்கள் விளக்க வல்லன.
மஞ்சாடும் பொழிலுடுத்த மலர்த்தடங்கள் புடைசூழும்
செஞ்சாலி வயல் மருதத் திருவாரூர் ( பெரிய ஏயர் -124 )
என்பதும் இவ்வூரின் செழுமைக்குச் சான்று. மேலும் சுந்தரர் திருவாரூர்ப் பிறந்தார்க்கெல்லாம் அடியேன் தேவாரம் 39-10 ) என்று கூறும் நிலை, அங்குப் பிறப்பதை மிகவும் புண்ணியமெனக் கருதிய மன நிலையைத் தெளிவுபடுத்துகிறது. இதனையே, முத்தி தரும் தலங்களுள்,காண முத்தி தருவது சிதம்பரம் : இறக்க முத்தி தருவது காசி ; பிறக்க முத்தி தருவது ஆரூர் என்ற எண்ணமும் உரைக்கின்றது. இவ்வூர்ப் பழமையை; தமிழர் பண்டு தொட்டே இவ்வூரில் வாழ்ந்தனர் என்பதனை. அப்பர் பாடல் ஒன்று மூலமும் நாம் அறிய இயலுகிறது.
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி
திகழும் அம்பலத்தே
பன்னிக் கூத்தை
ஆடுவான புகுவதற்கு முன்னோ ? பின்னோ ?
அணியாரூர் கோயிலாய்க் கொண்ட நாளே.