ஆய்தம் பற்றிய கருத்து

ஆய்தம் சார்பெழுத்து மூன்றனுள் ஒன்றாய் ஏனையவை போலப் புள்ளி
பெறும். இதன் தமிழ்ப்பெயர் அஃகேனம் என்பது. ஆய்தம் ஆச்ரிதம் என்பதன்
திரிபு. பழைய ஏடுகளில் ஆய்தமானது, : என இவ்வாறு இரண்டு புள்ளிகளோடு
எழுதப்பட்டது. ஒலியில் அது தன்முன் வரும் வல்லெழுத்தின் ஒலியைப்
பெறுகிறது. (முன் – இடமுன்) நெடுங்கணக்கில் ஆய்தம் உயிர்வரியின்
இறுதியில் வைக்கப்பட்டுள்ளது. இது வடமொழியிலுள்ள விஸர்க்கம் போல்வது.
வடமொழியில் விஸர்க்கம் ககர பகரங்கள் வருமிடத்து அவற்றின் ஒலி பெறும்.
“அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டு எழுதுப” என்று நச். கூறுவதால்,
அவர்காலத்தில் ஆய்தம் இரண்டு புள்ளி வடிவினதாகவே எழுதப்பட்டிருத்தல்
வேண்டும்.
ஆய்தத்துக்குத் தனியே ஒலியின்று. அஃது அடுத்து வரும் வல்லின
மெய்யின் ஒலிக்கு ஏற்பத்தானும் திரிந்தொலிக்கும். இக்காலத்தார்
ககரமெய்யை அடுத்த ஆய்த ஒலியையே ஏனைய வல்லெழுத்துக்களை அடுத்த
ஆய்தத்துக்கும் ஒலியாகக் கொண்டுள்ளனர். தன் சார்பின் பிறப்பொடு சிவணி
ஆய்தம் ஒலிக்கும் எனத் தொல்காப்பியனார் கூறலின், ஆய்தம் வல் லெழுத்து
ஆறனையும் அடுத்த எழுத்தாகக் கொண்டுவரும் அறுவகை இடங்களிலும் அவ்வொலியை
ஒட்டி அறுவகை ஒலித்தாகும். அடுத்த வல்லொலிக்கும் ஆய்த ஒலிக்கும் மிகக்
குறைந்த ஒலிவேறுபாடே இருத்தலின், முட்டீது, முஃடீது, கற்றீது கஃறீது
என்றாயினமை உளங்கொளத் தக்கது. (எ. ஆ. பக். 14, 84, 85)
ஆய்தம் நெடுங்கணக்கில் ஒளகாரத்துக்குப் பின்னரும் ககரமெய்க்கு
முன்னரும் இட்டு, முதலெழுத்துக்களை 31 என்று கணக்கிடும் வழக்கம்
வீரசோழிய காலத்தை ஒட்டி வந்தது. (எ. கு. பக். 5)
ஆய்தத்தை ஒலிக்கும்போது வாய் சிறிது திறந்தும் சிறிது மூடியும்
இருத்தலின், அதனை இடையெழுத்துப் போன்ற மெய் எனக் கூறல் தகும். (எ. கு.
பக். 48)