ஆய்தம் சார்பெழுத்துள் ஒன்று ஆதலின், தனக்குமுன் நிற்கும்
வல்லெழுத்தோடு ஒத்து அது பிறக்குமிடத்தில் பிறக்கும். முதலிலுள்ள
குற்றெழுத்து ஆய்தத்துக்குச் சார்பாயினும், முன்நிற்கும்
வல்லெழுத்தின் பிறப்பிடமே ஆய்தத்துக்கும் பிறப்பிடமாக வரும். ஆய்தம்
தலையிடத்தில் பிறக்குமென இளம்பூரணரும் நன்னூலாரும் பிறப்பிடம்
கூறுவர். நச்சி னார்க்கினியரும் இ.வி. நூலாரும் ஆய்தத்துக்குப்
பிறப்பிடம் நெஞ்சு என்பர். ஆய்தம் தனக்கு முன்னுள்ள வல்லெழுத்துப்
பிறக்குமிடத்தே பிறந்து, அதன்ஒலியையே தனது ஒலிக்கும் அடிப்படையாகக்
கொண்டது. (முன் – இடமுன்)
எஃகு, கஃசு, அஃது, பஃது, பஃறி என்பன எக்கு, கச்சு, அத்து, பத்து,
பற்றி என்பன போல ஒலிக்கும்.
முட்டீது, முஃடீது, கற்றீது, கஃறீது என்பனவற்றின் ஆய்தம் டகரறகர
ஒலியை ஒட்டியமைவதால், டகர றகரங்கள் ஆய்தமாகத் திரியும் என்று
கூறப்பட்டன. எனவே ஆய்தம் தனக்கு முன்னுள்ள எழுத்தை நோக்க அறுவகை
ஒலிகளை யுடையது எனலாம். (எ. ஆ. பக். 84, 85).
பண்டைக் காலத்தில், ஆய்தம் என்பது ஓரிடத்தில் பிறவாது ஆறு
இடங்களில் பிறந்தது என்பதும், அக்காரணம் பற்றி அறுவகைப்பட்டது
என்பதும் வெளிப்படை. அவ்வாறே குற்றியலிகரமும் குற்றியலுகரமும்,
அவற்றின் பற்றுக் கோடாகிய வல்லினமெய் முதலியன பிறக்குமிடங்களில்
பிறந்து பலவகைப்பட்டன என்பதும் வெளிப்படை. இவற்றுள் முற்றியலிகரமும்
குற்றியலிகரமும் ஓரினம் அல்ல என்பதும் விளங்கும். எஃகு, கஃசு,
முஃடீது, இஃது, அஃபோகம், கஃறீது என்ற இடங்களில் ஆய்தத்தின் ஒலி
மாறுபட்டிருத்தல் வேண்டும் என்பது பெறப்படும். இது முட்டீது என்றது
முஃடீது என்றேனும், கற்றீது என்றதும் கஃறீது என்றேனும் மாறலாம் என்று
கூறப்படுதலால் விளங்கும்.
சார்பெழுத்துக்களின் பிறப்பிடம் அவற்றிற்குச் சார்பான
எழுத்துக்களுக்கு அருகிலுள்ள அவற்றை ஒலிக்கத் தகுந்த இடமே யாகும். (எ.
கு. பக். 103 – 105).