ஆய்தக்குறுக்கம் என ஒன்றில்லாமை

‘குறியதன்முன்னர் ஆய்தப் புள்ளி, உயிரொடு புணர்ந்த வல்லாறன்
மிசைத்தே’ (எ. 38) என ஒருமொழிக்கண் வரும் ஆய்தம் கூறி, ‘ஈறியல்
மருங்கினும் இசைமை தோன்றும்’ (39) என நிலைமொழியீறு வருமொழி முதலொடு
புணர்ந்து நடக்குமிடத்துக் கஃறீது – முஃடீது – எனத் தன் அரைமாத்
திரையே இசைக்கும் தன்மை தோன்றும் என ஆசிரியர் தொல்காப்பியனார் அதனைப்
புணர்மொழிக்கண் வரும் ஆய்தமாகக் கூறினமையின், ஆய்தக்குறுக்கம் என
ஒன்று இன்று என்பது. (இ. வி. எழுத். 5 உரை)