ஆய் என்ற குலத்தில் வந்த ஆய் அண்டிரன் என்னும் வள்ளலின் ஊரே ஆய்குடி என்பது. இவ்வூர் பொதிய மலை நாட்டைச் சார்ந்தது. பொதிய மலைச் சாரலில் இன்றும் இவ்வூர் உள்ளது. தெற்கில். ஆய்குடி என்ற ஒன்று இல்லையாயின் இந்தப் பரந்த உலகமே கீழ் மேலதாகி நிலைகுலையும் என்கிறார் முடமோசியார் என்ற புலவர். ஆய் அண்டிரன் ஆண்டநாடு மலைநாடு என்பதை “ஆஅய் நல்நாட்டு அணங்குடைச் சிலம்பில்” (அகம்.198/14), “வழைப் பூங்கண்ணி வாய்வாள் அண்டிரன், குன்றம் பாடின கொல்லோ” (புறம்.131:2 3) என்ற அடிகளாலும் அம் மலைப் பொதியிலே என்பதை, “கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்” (புறம். 128:5) என்ற அடி.யாலும் தெளிவாக உணரலாம்.ஆய் அண்டிரன் காலத்தில் சிறந்திருந்த ஓர் ஊர் ஆய்குடி எனத் தெரிகிறது. அண்டிரன் ஆயர்குடியினன். இவனுடைய குலத்தினராகிய ஆயர்கள் வாழ்ந்த பகுதியாக இது இருந்திருக்கலாம். எனவே ஆயர்குடி என்பது ஆய்குடி என்ற் பெயரைப் பெற்றிருக்கலாம்.
“தென் திசை ஆஅய்குடி இன்றாயின்
பிறழ்வது மன்னோ, இம் மலர்தலை உலகே”. (புறம்: 132: 8 9)