ஆப்பாடி

பாடி என்ற பொதுக் கூற்றுடன் முடியும் இவ்வூர் இன்று திருவாப்பாடி என்று அழைக்கப்படுகிறது. அப்பர் பாடல் பெற்றது இத்தலம். ஆப்பாடியார் என்று அப்பர் தம் பாடலுள் குறித்துச் செல்ல, ஐயடிகள் காடவர் கோனும் தம் பாடலில் ( ஷேத்திரத் திருவெண்பா -19)
உள்ளிடத்தான் வல்லையே நெஞ்சமே ஊழ்வினைகள்
கள்ளிடத்தான் வந்து கலவாமுன் – கொள்ளிடத்தின்
தென்றிருவாப் பாடியான் தெய்வமறை நான் கனையும்
தன் திருவாய்ப் பாடியான் தான்
எனவே இயம்புகின்றர். இப்பாடலில் இன்றைய திருவாய்ப் பாடியே என்பது கொள்ளிடக்கரையின் தெற்குப் பாகம் எனச் சுட்டும் நிலையில் தெளிவுறுகிறது. ஆய்பாடி ஆப்பாடியாகி யிருக்கலாமோ என்ற எண்ணம் அமைகிறது. பாடி பொதுக் கூறாக இடத்தைக் குறிப்பிட்டு, ஆ என்பது தமிழ் லெக்ஸிகன் குறிப்பிடுவது போன்று ஒருவகை மரவகையாக அமைந்து இம்மரங்கள் நிறைந்த இடம் என வந்திருக்கலாமோ என்பது சிறிது பொருத்தமாக அமைகிறது. மேலும், இங்குள்ள கோவில் தல விருத்தமாக அத்தி அமைவது அத்திமரங்கள் நிறைந்த இடமாக இருந்திருக்குமோ என்ற எண்ணத்தைத் தருகிறது.