நாவார் புகழ்த் தில்லை அம்பலத்தான் அருள் பெற்று நாளைப்
போவானவனாம் புறத்திருத் தொண்டன் தன் புலை போய்
மூவாயிரவர் கை கூப்ப முனியாயவன் பதிதான்
மாலார் பொழில் திகழ் ஆதனூர் என்பர் இம்மண்டலத்தே ( 20 )
என்பது நம்பியாண்டர் நம்பியின் திருத்தொண்டர் திருவந்தாதி சுட்டும் பாடல். ஆதனூரில் பிறந்த திருநாளைப் போவாரின் ஊராக ஆதனூர் அமையக் காணலாம். சங்க இலக்கியம் ஆதனூர் என்ற பெயரைச் சுட்டாவிடினும் ஆதன் என்ற பெயரைத் தொல்காப்பியத்திலேயே காண இயலுகிறது. இதனைத் தமிழ் லெக்ஸிகன், மக்கள் இயற்பெயருள் ஒன்றாகச் சுட்டுகிறது. ( vol I Part I பக் 227) எனவே ஆதன் என்பது பண்டு தொட்டே தமிழர் சுட்டிய பெயருள் ஒன்று என்பது தெளிவாகின்றது.. பெரிய புராணத்தில் இவ்வூர்.
பகர்ந்துலவு சீர் போற்றும் பழைய வளம் பதியாகும்
திகழ்ந்த புனற் கொள்ளிடம் பொன் செழுமணிகள் திரைக்கரத்தால்
முகந்து தர இரு மருங்கும் முளரி மலர்க் கையேற்கும்
அகன்பணை நீர் நன்னாட்டு மேற்கா நாட்டாதனூர் (24-1) எனச் சுட்டப்படுகிறது. எனவே கொள்ளிடக்கரை நிலையில் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்ததாக அமைகிறது. மேலும் தஞ்சாவூரில் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள ஆதனூர் என்ற ஊர் ஒன்றையும் காண்கின்றோம். தளிர கல்வெட்டுகளில் ஆதநூர். ஆதனூர் ; ஆதனூர்க் கோட்டை என்ற முப்பெயர்களுள் புதுக்கோட்டை திருமய்யம், ஆலங்குடி வட்டத்துள் உள்ள வேறு வேறு ஊர்களையும் தெரிய வருகின்றோம். வை. சதாசிவப் பண்டாரத்தார் தம் கல்வெட்டுக்கள் கூறும் உண்மைகள் நூலில், சேக்கிழார் சுட்டும் ஆகனூர் சிதம்பரம் தாலுக்காவில் உள்ள, ஓமாம்புலியூ.க்கு மேற்கே. ஒன்றரை மைல் தூரத்தில் கொள்ளிடக் கரையில் உள்ள ஆதனூரே நந்தனார் பிறந்தருளிய இடம் என்பதை ஆய்ந்து சுட்டுகின்றார் ( பக்- 50 ). இவன் சங்க இலக்கியத்தில் ஐங்குறு நூறு, பதிற்றுப்பத்து ( ஏழாம் பத்து பதிகம் ) இவற்றுள் ஆதன் என்ற சேர மன்னர் ( செல்வக் கடுங்கோ வாழியாதன் ) பற்றிய குறிப்பு கிடைக்கின்றது. கழக உரையாசிரியர், ஐங்குறு நூறு ( வேட்கைப்பத்து மருதம் ) முதற் பாடலுக்கு எழுதும் உரையில், இவனுக்குப் பின்னர் பெயரால் ஒரு பழங்குடி நிலவியது என்று தெரிகிறது. ஆதனவினி, ஆதன் எழினி, ஆதன் அழிசி என வரும் சேரமான்களின் பெயர் இதற்குச் சான்றாகும் ( பக். 6 ) என்று எழுதிச் செல்கின்றார். எனவே சேர மன்னருள் ஒரு குடியினர் ஆதன் குடி யினர் என்பது தெளிவு பெறுகின்றது. சங்க இலக்கியத்தை நோக்க அச்சேர மன்னன் வாழ்ந்த அல்லது ஆண்ட இடம் சேர நாடு ( சேரவர் மருக 3-16 ) என்பது புலப்படுகிறதே ஒழிய பேர் தெரியவில்லை. பதிற்றுப்பத்தில் ஒரு பாடலில் ( 7-7 ) கள்
கடும் பறைத்தும்பி சூர் நசைத் தாஅய்ப்
பறைபண்ணழியும் பாடுசானெடுவரைக்
கல்லுயர் நேரிப் பொருநன்
செல்வக் கோமாற் பாடினை செலினே
நேரிமலை காவலனாக இவன் காட்டப்படுகின்றான். நேரி மலைக்குத் தமிழ் லெக்ஸிகன் பொருள் எழுதும் போது நேரி தமிழ்நாட்டில் உள்ளதும் சோழர்க்குரியதுமான ஒரு மலை எனப் பதிற்றுப்பத்து 40ஆம் பாடலைச் சுட்டிக் காட்டுகிறது. இப்பாடலில் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் காப்பியாற்றுக் காப்பியனார் என்ற புலவரால், நீரிமிழ் சிலம்பின் நேரியோனே எனச் சுட்டப்படுகின்றான். எனவே இம்மலைப் பகுதியைச் சேரமன்னர்கள் ஆண்டு வந்தனர் எனக் கருத இடமுண்டாகிறது. இந்நிலையில், இவர்கள் ஆண்ட ஊர் வழி வழியாகப் பின்னர் ஆதனூர் என்று பெயர் பெற்றிருக்கவும், இல்லையெனில் இவர் மரபினர் வாழ்ந்து வந்த பல ஊர்கள் இப்பெயரால் சுட்டப்பட்டிருக்கவும் வாய்ப்பு அமைகிறது. எனினும் சேர சோழ உறவைக் காட்டும் நிலையில் அக்காலத் தமிழக நிலையை உணர்த்துகின்றது இவ்வூர் எனவும் கருதலாம்.