ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை

ஆண் பெண் என்பன விரவுப்பெயராயினும், தனியே கூறிய வழிப் பெண்ணும்
ஆணும் பிள்ளையும் உயர்திணைக்கே உரியன. வாளாதே, பெண் வந்தது என்று
கூறியவழி அஃறிணைப்பொருள் என்பது உணரலாகாது. பெண்குரங்கு வந்தது என்று
விதந்தே கூறவேண்டும். பெண் பிறந்தது, ஆண் பிறந்தது, பிள்ளை பிறந்தது
என்று அடையடாது சொல்லிய வழி உயர்திணைக்கேயாம். ஆண் பெண் என்பன
உயர்திணைப் பெயர்களாயினும், அஃறிணைப் பெயர்கள் போலப் புணர்ச்சி விதி
பெறும் என்பது. (தொ. பொ. 624 பேரா.)
“ஆண் பெண் என்பன, ஆண் வந்தது, பெண் வந்தது என இரு திணைக்கண்ணும்
அஃறிணை முடிபே பெறுதலின், ‘அஃறிணை இயல்பின’ என்றார்” என்பர்
நச்சினார்க்கினியர். (தொ. எ. 303)