ஆட்சியும் காரணமும் பற்றிய குறி

குறி – அடையாளம், இடப்படும் பெயர். ஆட்சி அச் சொல்லைப் பின்னர்
எடுத்துப் பயன்படுத்துதல்; காரணம் – அப்பொருளுக்கு அப்பெயர்
ஏற்பட்டதன் காரணமாம். ஆகவே, பின்னர்ச் சுருக்கமான பெயரால் எடுத்துக்
குறிப்பதற்கும், பெயரிடுவதற்குரிய காரணத்தை அறிவிப்பதற்கும் முன்னர்ப்
பெயரிடுவது ஆட்சியும் காரணமும் பற்றிய குறியாம்.
எ-டு : ‘ஒளகார இறுவாய்ப் – பன்னீரெழுத்தும் உயிரென மொழிப’ (தொ.
எ. 8 நச்.)
அகரம் முதல் ஒளகாரம் இறுதியாக உள்ள பன்னிரண்டு எழுத்துக்களுக்கும்
உயிர் என்ற பொதுப்பெயர், பின்னர்ப் புணர்ச்சி பற்றி இவற்றை உயிர் என்ற
பெயரான் எடுத்துக் கூறுவதற்கு எளிமையாக அமைதல் ஆட்சி பற்றிய குறியாம்.
பதினெட்டு மெய்களையும், அகரம் முதல் ஒளகாரம் ஈறாக உள்ள
பன்னீரெழுத்துக்களும், உடம்பினை உயிர் இயக்குதல் போல இயக்குதலின்,
அவற்றிற்கு உயிர் என்ற பொதுப்பெயர் வழங்குதல் காரணம் பற்றிய குறியாம்.
(தொ. எ. 8 நச். உரை)